தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தேர்தல் உறுதிமொழியை அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் இன்று வெளியிட்டார். ஆட்சிக்கு வந்தபிறகு இந்த உறுதிமொழிகளை நிறைவேற்றவிட்டால் பொதுமக்கள், நீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாம் என வாசன் குறிப்பிட்டார்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில் 43 பக்கங்கள் கொண்ட தேர்தல் உறுதிமொழி அறிக்கையை ஜி.கே.வாசன் வெளியிட்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஆட்சி மாற்றம் வேண்டும் என திமுக பிரசாரம் செய்து வருகிறது. எங்களை பொருத்தமட்டில் அதிமுக ஆட்சி மாறி, மாற்றாக திமுக ஆட்சி வருவது ஆட்சி மாற்றமில்லை. நபர்கள் மாறுவதும், கட்சிகள் மாறுவதும் ஆட்சி மாற்றமில்லை. எந்த கட்சியின் தலைவர்கள் பொதுவாழ்வில் தங்களை அர்ப்பணித்து, தூய்மையான, வெளிப்படையான நிர்வாகத்தை தருகிறார்களோ அவர்களால்தான் நல்ல ஆட்சி தர முடியும். கூட்டணி ஆட்சி அமைந்தால்தான் உண்மையான அரசியல் மாற்றம் வரும் என நம்புகிறோம்.
தேமுதிக, மக்கள் நலக் கூட்டணி, தமாகா கூட்டணி ஆட்சி அமைந்தால் வெளிப்படையான, ஒட்டுமொத்த வளர்ச்சியுடன் கூடிய ஊழலற்ற நிர்வாகம் ஏற்படுத்தப்படும்.
எங்களது ஆட்சியில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும். ஏழை, நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் இலவச கல்வி, இலவச மருத்துவ வசதி செய்து தரப்படும்.
மேலும், 10 முதல் 15 விவசாயிகள் அடங்கிய கூட்டுறவு சங்கம் ஏற்படுத்தப்பட்டு, அரசே ஆழ்துளை கிணறு அமைத்து தரும். இதிலிருந்து கிடைக்கும் நீரை விவசாயிகள் பகிர்ந்து கொள்ளலாம்.
மாணவர்களுக்கு எளிய முறையில் கல்விக் கடன் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதேநேரத்தில் ஏற்கெனவே கடன் பெற்ற ஏழை மாணவர்களின் கடன்களை தள்ளுபடி செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதவாது, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் ஏழை மாணவர்கள் பெற்ற கடனை, மாநில அரசே திருப்பி அளிக்கும்.
இலங்கைவாழ் சிங்களருக்கு கிடைக்கக்கூடிய கூடிய பாதுகாப்பு, வாழ்வாதாரம் இலங்கை தமிழர்களுக்கும் கிடைக்க வேண்டும். இதற்கான ஆக்கபூர்வமான பணியை இந்திய அரசு செய்ய வேண்டும் .
மேலும், இந்த தேர்தல் உறுதிமொழிகளை கட்டாயம் நிறைவேற்ற வலியுறுத்தி பொதுமக்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாம் என்றார் வாசன்.
