தமிழகத்தை ஆளப்போகும் கட்சியாகத் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி திகழும் என்றார் அக்கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன்.
திருச்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கட்சியின் மாநிலச் செயற்குழுக் கூட்டத்துக்குத் தலைமை வகித்து அவர் மேலும் பேசியது:
தமிழ்மாநில காங்கிரஸ் தொடங்கப்பட்டு 2 ஆண்டுகள் 2 மாதங்களாகின்றன. த.மா.கா. ஆண்ட கட்சியோ, ஆளும்கட்சியோ அல்ல. ஆனால், விரைவில் தமிழகத்தை ஆளப் போகும் கட்சியாகத் திகழும்.
சவால்கள், சோதனைகள், வேதனைகளைக் கடந்து பணியாற்றி வருகிறோம். தொண்டர்களின் துணையுடன் இயக்கப் பணியாற்றுவோம். உங்களின் உழைப்பும், அர்ப்பணிப்பும் இயக்கத்துக்கான ஆணிவேராகும் என்றார் வாசன்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
தமிழகத்தில் நிலவும் கடும் வறட்சியால் நூற்றுக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இப்பிரச்னைக்கு தீர்வு காண மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், விவசாயிகள் பெற்ற கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்.
தமிழகத்தில் காவிரி, கொள்ளிடம், பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகளைக் கட்டி மழைக்காலங்களில் வரும் உபரிநீரைத் தேக்குவதற்கும், நீர்த்தேக்கங்கள், கால்வாய்கள், ஏரி, குளங்கள் ஆகியவற்றை தூர்வாருவதற்கும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு மத்திய, மாநில அரசுகள் நிரந்தர தீர்வு காண வேண்டும். நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு அளிக்கும் வகையில் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 2 மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் விரைவாக கிடைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காவிரிப் பிரச்னைக்கு நிரந்த தீர்வு காணும் வகையில், காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக் குழுவை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்துக்கு மாவட்டத் தலைவர்கள் திருச்சி வடக்கு கே.வி.ஜி. ரவீந்திரன், திருச்சி தெற்கு டி. குணா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகர் மாவட்டத் தலைவர் நந்தா கே.செந்தில்வேல் வரவேற்றார்.
மாநிலத் துணைத் தலைவர்கள் ஞானதேசிகன், என்.எஸ்.வி.சித்தன், ராமன், மாநிலப் பொருளாளர் கோவை தங்கம், பொதுச் செயலர் விடியல் சேகர், மாநில விவசாய அணித் தலைவர் புலியூர் ஏ.நாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
புதிய கொடி அறிமுகம்:
தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டத்தில், பெருந்தலைவர் காமராஜ் மற்றும் ஜி.கே. மூப்பனார் ஆகியோரின் படம் இடம் பெற்றுள்ள புதிய கட்சிக் கொடியை ஜி.கே. வாசன் அறிமுகம் செய்து வைத்தார்.
