மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சியில் இன்று நடந்தது. தலைவர் ஜி.கே.வாசன் தலைமை தாங்கி பேசுகையில், ‘தமாகா ஆளப்போகும் கட்சி. நாகரீகமான, நடுநிலையான மாற்று கட்சிகளையும் மதிக்கும் இயக்கம். கடந்த காலத்தில் எங்களுக்கு நம்பிக்கை கொடுத்து ஏமாற்றி விட்டார்கள். அந்த சிரமங்கள், சோதனைகளை கடந்து மக்கள் மனதில் நல்ல கட்சியாக தமாகா உருவெடுத்து உள்ளது’ என்றார். மூவர்ண நிறத்தில் காமராஜர், மூப்பனார் படங்களுடன் தமாகா புதிய கொடியை வாசன் அறிமுகப்படுத்தினார். மாவட்ட தலைவர்கள் குணா, ரவீந்திரன், விவசாய பிரிவு தலைவர் புலியூர் நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் நந்தா செந்தில் வரவேற்றார்.
கூட்டத்தில், காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்குமுறை குழுவை உடனே மத்திய அரசு அமைக்க வேண்டும்.
காவிரியில் மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு மத்திய அரசு அனுமதி தரக்கூடாது. உடனடியாக அதை தடுத்து நிறுத்த வேண்டும். தமிழகத்தில் வறட்சி ஏற்பட்டுள்ளதால் இனிவரும் காலங்களில் வறட்சியை சமாளிக்க தடுப்பணைகள் கட்ட வேண்டும். நீர் நிலைகளை தூர்வாரி தண்ணீரை சேமிக்க வேண்டும். மாணவர்களுக்கான கல்வி கடன், வட்டியை முழுவதுமாக தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயிகளின் கடன்கள், வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில துணைத் தலைவர்கள் ஞானதேசிகன், கோவை தங்கம், கந்தசாமி, பொதுச்செயலாளர் விடியல் சேகர், முன்னாள் எம்.பி. சித்தன், சக்தி வடிவேல், முனவர் பாட்சா, நாட்ராயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
