கந்து வட்டிக்காரர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என த.மா.கா., தலைவர் வாசன் கூறினார்.விழுப்புரம் மாவட்டம், உளுந்துார்பேட்டைக்கு நேற்று மாலை 6:00 மணிக்கு, த.மா.கா., தலைவர் வாசன் வந்தார். த.மா.கா., மாவட்ட நிர்வாகி சிவநாவுக்கரசு வீட்டிற்கு சென்று, அவரது உடல்நிலையை கேட்டறிந்து, ஆறுதல் கூறினார். மாநில துணை செயலாளர் அதையூர்பாண்டியன், வட்டார தலைவர்கள் போஸ்கோ, செல்வராஜ் உடனிருந்தனர். பின்னர், த.மா.கா., தலைவர் வாசன் நிருபர்களிடம் கூறியதாவது:தினகரன் குடும்பத்தினர், உறவினர்கள் வீடுகளில் நடந்த வருமான வரி சோதனை குறித்து, பொதுமக்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை, மத்திய அரசு தெளிவுப்படுத்த வேண்டும்.வடகிழக்கு பருவ மழையால் டெல்டா மாவட்டங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன. அப்பகுதி மக்களுக்கு நிவாரணங்களை உடனடியாக வழங்க வேண்டும். பயிர் காப்பீட்டு தொகையை அரசு வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு கரும்பு நிலுவை பாக்கி தொகையை உடனடியாக வழங்கவேண்டும். கந்து வட்டிக்காரர்களுக்கு காவல்துறை மூலம் சட்டப்படி கடும் தண்டனை வழங்க வேண்டும். இவ்வாறு ஜி.கே.வாசன் கூறினார்.
