எல்லை தாண்டும் மீனவர்களுக்கு ரூ. 15 கோடி அபராதமா?
ஐயா ஜி.கே.வாசன் கண்டனம்
இது தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஐயா ஜி.கே.வாசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
இலங்கை சிறையில் வாடும் 86 மீனவர்கள் வரும் 28ம் தேதி விடுதலை செய்யப்படுவதாக செய்திகள் தெரிவித்திருப்பது மீனவர்களின் தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி.
மேலும், மத்திய அரசு இலங்கை அரசிடம் தொடர்பு கொண்டு இதுவரை இலங்கை வசம் இருக்கும் தமிழக மீனவர்களின் 36 படகுகளையும் காலதாமதமின்றி ஒப்படைக்கவும், சேதமடைந்த படகுகளுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் வலியுறுத்த வேண்டும்.
தமிழக மீனவர்கள் எல்லைத் தாண்டி மீன்பிடித்தால் அபராதமாக ரூ.15 கோடி வசூலிக்கப்படும் என இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் அறிவித்திருப்பதாக வந்திருக்கும் தகவல் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
இது மிகவும் கண்டிக்கத்தக்கது.
மீனவர்கள் பிரச்னையில் இலங்கை அரசின் கைது நடவடிக்கையும், சட்டத்திருத்தம் கொண்டுவந்து அபராதம் விதிப்பதும் ஒரு சுமூகத்தீர்வுக்கு வழி வகுக்காது.
எனவே இரு நாட்டு மீனவப் பிரதிகளுக்கிடையே பேச்சு வார்த்தை நடந்து மனிதாபிமான அடிப்படையில் ஒரு சுமூகத் தீர்வு எட்டப்படும் வரை இலங்கை அரசு தமிழக மீனவர்களை துன்புறுத்துவதோ, கைது செய்வதோ கூடாது என்பதை மத்திய அரசு இலங்கை அரசுக்கு கண்டிப்போடு தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
