சென்னை, டிச. 16–
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெய்த பெரும் மழையால் பல மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், கடலூர், திருநெல்வேலி, தூத்துக்குடி போன்ற மாவட்டங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது.
மழையால் வந்த துன்பம் ஒருபுறம், ஏரிகள் நிரம்பி வழிந்த நீரால் வந்த துன்பம் ஒரு புறம். மக்கள் தங்களது பொருட்களை இழந்து, பல இடங்களில் முதல் தளம் வரை நீர் வந்து, தேங்கிய காரணத்தால் சேர்த்த பொருட்கள் அனைத்தையும் இழந்து, கல்லூரி, பள்ளி மாணவ – மாணவிகளின் கல்வி சான்றிதழ் உட்பட அனைத்தையும் இழந்து நிற்கின்றனர்.
தங்கள் எதிர்காலம் எப்படி அமையும் என்று எண்ணிப்பார்க்க இயலாத துயரத்தில் இம்மக்கள் வீழ்ந்து கிடக்கிறார்கள். இப்பெரும் வெள்ளம், நமது மனித நேயத்தை வெளிக்கொணர்ந்து இருக்கிறது.
மதங்களைக் கடந்து, ஜாதி உணர்வுகளை தாண்டி, அரசியல் வேற்றுமைகளை ஒதுக்கி வைத்துவிட்டு உதவிக்கரம் நீட்ட ஒவ்வொருவரும் ஓடிவந்த அந்த மாட்சிமையை கண்டு இன்று இந்தியாவே வியக்கிறது. குறிப்பாக இந்த தேசத்தின் எதிர்கால சொத்தாக இருக்கின்ற இளைய சமுதாயம் இந்த பணியில், களத்தில் நிற்கின்றது. நமது இயக்க நண்பர்களும் பல்வேறு இடங்களில் நிவாரண உதவிகள் செய்ததோடு மட்டுமல்லாமல், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டி வருகிறார்கள். இவைகள் தொடர வேண்டும். நாம் பாதிக்கப்படவில்லை. நம்மை இந்த தமிழ்ச் சமுதாயம் தத்தெடுத்துக் கொள்ளும் என்கின்ற உணர்வு பாதிக்கப்பட்ட மக்களுக்கு வரவேண்டும். தொடர்ந்து இந்தப் பணியை மேற்கொள்வோமாக.
நானும், நம்முடைய இயக்க நண்பர்களுடன் சேர்ந்து சென்னை மாநகரத்தின் பல பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று நிவாரணப் பணிகளில் ஈடுபட்டேன். பாதிக்கப்பட்ட காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர், தூத்துக்குடி மாவட்டங்களுக்கும் சென்று அவர்களது தேவைகளை புரிந்து கொண்டு, இயக்க நண்பர்களோடு இணைந்து நிவாரணப் பணியில் ஈடுபட்டேன்.
வருடா வருடம் நம்முடைய இயக்க நண்பர்கள் என் மீது கொண்ட பாசத்தாலும், பற்றாலும் என்னுடைய பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி வருகிறீர்கள். இந்த ஆண்டு எனது பிறந்த நாள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்மால் முடிந்த அளவிற்கு அவர்களின் துயர் துடைக்கும் நாளாக இருக்க வேண்டும்.
எனவே நம் இயக்கத் தொண்டர்களும், நண்பர்களும் என் பிறந்த நாளை ஆடம்பரம் இல்லாமல் பிளக்ஸ் போர்டு, பேனர், போஸ்டர், நோட்டீஸ் ஆகியவற்றை கண்டிப்பாக தவிர்த்து ஏழை, எளிய மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிட வேண்டும் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

