மத்திய பா.ஜ.க அரசு தமிழக மருத்துவர்களின் மருத்துவ மேற்படிப்புக்கான நுழைவுத் தேர்வினை சென்னையில் நடத்தி, அவர்களது சிரமத்தை தவிர்த்திட வேண்டும்
தமிழகத்தில் பெய்த கனமழையால் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்கள் பெரிதளவில் பாதிக்கப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்து போய்விட்டது.. இச்சூழலில் மாணவர்களின் கல்வி கற்கும் சூழலும் பாதிக்கப்பட்டுள்ள்து. இவற்றையெல்லாம் சரிசெய்ய வேண்டியது தமிழக அரசின்கடமையாகும். எனவே பாதிக்கப்பட்ட பகுதிகளில் இயல்பு வாழ்க்கை திரும்பும் வரை பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டு, பொது மக்களுக்கு வசதிகளையும் ஏற்படுத்தி தர வேண்டும்.
மருத்துவத்துறை என்பது சேவைத் துறையாகும். இந்திய நாட்டு மருத்துவர்களுக்கு உலக அளவில் மிகப் பெரிய மதிப்பும், மரியாதையும் உண்டு என்றால் அது நம் தாய் நாட்டிற்கு கிடைத்த பெருமையாகும். இதற்கு காரணம் நமது மருத்துவர்கள் தங்கள் துறையில் சிறப்பாக பணியாற்றுவது தான். அதிலும் குறிப்பாக தமிழகத்தின் மருத்துவக் கல்லூரியில் படித்த ஒவ்வொரு மருத்துவரும் நம் நாட்டிலும் மற்றும் வெளி நாடுகளிலும் தங்கள் மருத்துவச் சேவையை மிகச் சிறப்பாக மேற்கொள்கிறார்கள்.எனவே தமிழக மாணவர்கள் அகில இந்திய அளவில் மருத்துவ மேல் படிப்பு படிப்பதற்கு, நுழைவுத் தேர்வு முறையில் எந்த ஒரு இடற்பாடும் இருக்கக் கூடாது.
ஒவ்வொரு வருடமும் அகில இந்திய மருத்துவ மேல் படிப்புக்கு நுழைவுத் தேர்வு நடைபெறும். சென்னையில் பெய்த தொடர் மழையால் அகில இந்திய மருத்துவ மேல் படிப்புக்கான நுழைவுத் தேர்வு தள்ளி வைக்கப்பட்டு வரும் 2016, ஜனவரி 11 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நுழைவுத் தேர்வில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் தேர்வு எழுத உள்ளனர். ஆனால் சென்னையில் தேர்வு எழுத வேண்டிய பலருக்கு ஜம்மு காஷ்மீர், அசாம், ஒடிசா, டெல்லி போன்ற வட மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பண்டிகைக் காலமாக இருப்பதால் தேர்வு எழுவதற்காக அங்கு சென்று வருவதற்கு ரயில் டிக்கெட் கிடைப்பது மிகவும் அரிது. மேலும் விமான பயணத்திற்கும் அதிகப்படியான செலவாகும். இதற்காக சென்றுவர 6 நாட்களுக்கும் மேலாகும். எனவே தேர்வு எழுத இருக்கும் தமிழக மருத்துவர்களுக்கு சென்னையிலேயே தேர்வு மையம் அமைத்து அவர்களது சிரமத்தை தவிர்த்திட வேண்டும். அகில இந்திய மருத்துவ கவுன்சில் இதை நடைமுறைப்படுத்தி, தமிழக மருத்துவர்கள் சென்னையிலேயே தேர்வு எழுதுவதற்கு ஏதுவாக தமிழக அரசு மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.
G.K. வாசன்
தவைவர் தமிழ் மாநில காங்கிரஸ்
