மழை வெள்ளத்தால் பாதிப்படைந்த சென்னை விமான நிலையத்தை சீரமைக்க சிறப்பு நிதி : வாசன் வலியுறுத்தல்

சென்னை: மழை வெள்ளத்தின் காரணமாக பாதிப்படைந்ததிருக்கும் சென்னை சர்வதேச விமான நிலையத்தை சீரமைப்பதற்கு சிறப்பு நிதியை ஒதுக்க வேண்டும் என த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உள்நாட்டு சேவைகளை மட்டுமல்லாமல் வெளிநாட்டு சேவைகளிலும் முக்கிய பங்கு வகித்து வரும் சென்னை விமான நிலையத்தில், மழை வெள்ளத்தின் காரணமாக ரூ.100 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிப்பதாக வாசன் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய விமான போக்குவரத்து துறை உடனடி நடவடிக்கைகள் மேற்கொண்டு சென்னை விமான நிலையத்தை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள வாசன், மேற்கூரைகள் இடிந்து விழும் காரணத்தை கண்டறிந்து உள்கட்டமைப்பை உறுதிப்படுத்த வலியுறுத்தியுள்ளார். வெள்ளத்தின் காரணமாக தற்போது ஏற்பட்டுள்ள பாதிப்பை சீரமைப்பதற்கும், அதன் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும் சிறப்பு நிதியை ஒதுக்கி மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.