வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று சிலிண்டருக்கு கட்டணம் வசூலிக்க கூடாது ஜி.கே.வாசன் கோரிக்கை

ன்னை,

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

தமிழகத்தில் சமீபத்தில் பெய்த கடும் மழையால், பலர் தங்கள் வீடுகளில் பயன்படுத்தி வந்த கியாஸ் சிலிண்டர்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு இழந்துள்ளனர். கியாஸ் சிலிண்டர்களை இழந்தவர்களுக்கு மாற்று சிலிண்டர்களை வழங்க மத்திய அரசு முடிவெடுத்த போதிலும், எண்ணெய் நிறுவனங்கள் அதனை வழங்குவதற்கு ஆலோசனை செய்து முடிவெடுப்பதாக உள்ளனர்.

குடிசை பகுதிகள், கீழ்தளத்தில் உள்ள சாதாரண ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்களுக்கு வழங்க வேண்டிய மாற்று சிலிண்டர்களுக்கு எந்தவித கட்டணமும் இன்றி வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக அரசு மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள வீடு, கடைகளுக்கு 500 யூனிட் வரை மின் கட்டணத்தை 3 மாதத்திற்கு ரத்து செய்திடவும், மற்றவர்களுக்கும், தொழிற்சாலைகளுக்கும் மின்கட்டணம் கட்ட எந்த கெடுபிடியும் இல்லாமல் கால அவகாசம் வழங்கிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.