பாதிக்கப்பட்ட மக்களுக்கு பால், பால் பவுடர் இலவசமாக வழங்க வேண்டும் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சென்னை,

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

தமிழகத்தில் தொடரும் கனமழையில் இருந்து மக்களை மீட்டெடுத்து, சுகாதாரத்துடன் பாதுகாத்திட தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.

சென்னையில் ஒரு தனியார் மருத்துவமனையில் மின்பற்றாக்குறையின் காரணமாக மருத்துவ வசதி உரிய நேரத்தில் அளிக்க முடியாமல் 18 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இது துரதிர்ஷ்டவசமானது, மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. எனவே அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேர மருத்துவ சேவை வழங்கப்பட வேண்டும். தனியார் மருத்துவமனைகளுக்கு முழு நேரமும் மின்சாரம் வழங்கிட மின்சாரத்துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் தமிழகம் முழுவதும் குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அனைத்து பகுதிகளுக்கும் சுழற்சி முறையில் மின்சாரத்தை வழங்கிட வேண்டும். மேலும் மக்களுக்கு தண்ணீர், பால், பால் பவுடர் இலவசமாக வழங்கிடவும் அரசு முன்வர வேண்டும். எனவே தமிழகத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களைப் பாதுகாத்திட மிக முக்கியத் தேவையான மருத்துவத்தையும், மின்சாரத்தையும் முழுமையாக வழங்கிட தமிழக அரசு, அரசு எந்திரங்களை முடுக்கி, மக்களைப் பாதுகாத்திட வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.12301716_773631562782084_10482106692952525_n