சென்னை அடையாறு பகுதியில் தேங்கியுள்ள குப்பையை அகற்றும் பணிகளில், 200 தன்னார்வலர்களுடன், த.மா.கா., தலைவர் வாசன், நேற்று ஈடுபட்டார்.
கடந்த ஒரு வாரமாக, சென்னையில் பெய்த, கனமழை காரணமாக, சாலைகளின் ஓரங்களில் மலை போல குப்பை தேங்கியுள்ளன. வெள்ளம் பாதித்த பகுதிகளில், ஆறுகளில் அடித்து வரப்பட்ட குப்பைகள் ஆங்காங்கே தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது.
சென்னை அடையாறு, பட்டினப்பாக்கம் முகத்து வாரத்தில் சங்கமிக்கிறது. ஆற்றில் அடித்து வரப்பட்ட குப்பை அடையாறு பகுதி மல்லிகைப் பூ நகர், ராமசாமி தோட்டம், அருணாசலபுரம் போன்ற இடங்களில் தேங்கி கிடக்கிறது.
இந்த குப்பையை அகற்ற, மாநகராட்சி ஊழியர்கள் முன்வராததால், தென் சென்னை கிழக்கு மாவட்ட த.மா.கா., சார்பில், 200 தன்னார்வலர்களுடன் வாசன், நேற்று குப்பையை அள்ளினார்.
வேட்டியை மடித்து கட்டி, சாக்கடையில் இறங்கி, குப்பைகளை அகற்றும் பணியில் வாசன் ஈடுப்பட்டதை கண்ட பொதுமக்கள், அவருடன் களமிறங்கி குப்பையை அகற்றினர்.

