கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்துக்கு வழிவகை செய்ய வேண்டும் ஜி.கே.வாசன் கோரிக்கை

பெரியபாளையம்,

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்துக்கு மத்திய–மாநில அரசுகள் வழிவகை செய்ய வேண்டும் என்று த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்

நிவாரண உதவி

திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம், சேத்துப்பாக்கம், அகரம், உள்ளிட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளை த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று நேரில் பார்வையிட்டார். அப்போது அக்கட்சியின் சார்பில் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு பாய், அரிசி உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளர் விக்டரிமோகன் தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் நந்தகோபால் முன்னிலை வகித்தார். ஜி.கே.வாசன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.

தடுப்பணைகள் கட்ட வேண்டும்

பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:–

சென்னை, கடலூர், திருவள்ளூர், காஞ்சீபுரம் ஆகிய மாவட்டங்களில் ஏற்பட்ட இயற்கையின் சீற்றத்தை ஒரு பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும். கொசஸ்தலை ஆற்றில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது.

எனவே இந்த தண்ணீரை சேமிக்க தரமான தடுப்பணைகளை ஏற்படுத்தி மழைநீரை தேக்கி வைக்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள ஏரி, குளம் ஆகியவற்றை தூர்வார வேண்டும்.

சென்னையில் ஏரி, ஆற்று படுக்கையில் ஆக்கிரமிப்பால் மக்கள் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். திராவிட கட்சிகள் மக்களின் வாழ்வாதாரத்தையும், இயற்கை வளங்களையும் பாதுகாக்க தவறி விட்டது.

ரூ.5 ஆயிரம் கோடி

தற்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு பல்வேறு பகுதிகளில் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ள பொதுமக்களுக்கு மத்திய–மாநில அரசுகள் உணவு, உடை மற்றும் அவர்களின் வாழ்வாதாரத்துக்கு வழிவகை செய்து தரவேண்டும்.

பாதிக்கப்பட்ட மக்களின் குடும்ப அட்டை, பள்ளி மாணவர்களுக்கு கல்வி சான்றிதழ்கள், உள்ளிட்டவற்றை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசியல் கட்சிகள் வேறுபாடுகளை மறந்து நிவாரண உதவிகளை வழங்க வேண்டும். பால் விலை, குடிநீர் ஆகியவற்றை அதிக விலைக்கு விற்கும் வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

த.மா.கா. சார்பில் ரூ.30 லட்சம் நிவாரண உதவி பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு மேலும், ரூ.5 ஆயிரம் கோடி வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.12313824_932674196807520_474928344419501162_n 12342527_932744076800532_9072119800842081782_n