கிரானைட் முறைகேடு குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்: வாசன் வலியுறுத்தல்

அரியலூர், நவ. 25–

அரியலூரில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் நிருபர்களிடம் கூறியதாவது:–

மதுரை கிரானைட் முறைகேடு குறித்த விசாரணை அறிக்கையை ஐ.ஏ.எஸ்.அதிகாரி சகாயம் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். முறைகேடுகள் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தப்படுவதோடு, உண்மை குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்று தருவது உள்ளிட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு வெளிப்படையாக மேற்கொள்ள வேண்டும்.

பருவமழையால் 10 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகரில் மழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு த.மா.கா. சார்பில் ரூ.7 லட்சம் மதிப்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. மற்ற மாவட்ட பகுதிகளில் சுமார் ரூ.50 லட்சம் மதிப்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

த.மா.கா.வை தமிழகத்தில் வலிமையான இயக்கமாக மாற்ற முயற்சி மேற்கொண்டு வருகிறோம். தேர்தலில் போட்டியிடுவது, தேர்தல் கூட்டணி பற்றி பின்னர் முடிவு செய்யப்படும்.

மழையால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும். ஏரி, குளம், குட்டைகளுக்கு நீர்வரத்து வரும் பாதைகளை சுத்தப்படுத்தி நீர் வருவதற்கும், நீர் வடிவதற்கும் வடிகால் வசதியினை அரசு செய்திட வேண்டும். கொள்ளிடம் ஆற்றின் நடுவில் அமைந்துள்ள மேலராமநல்லூர், கீழராமநல்லூர் கிராம மக்கள் தஞ்சை மாவட்டத்திற்கு எளிதாக சென்று வருவதற்கு வசதியாக பாலம் அமைத்து கொடுக்க வேண்டும்.

மருதையாற்றில் கண்டக்குடி வைப்பூர் போன்ற இடங்களில் நீர் தேக்க அணைகளை கட்டி தந்து விவசாயத்திற்கு பாசன வசதி செய்ய வேண்டும். அரியலூரில் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம் கட்டுவதற்கு உடனடியாக அரசு ஆவணம் செய்ய வேண்டும். அரியலூரில் மாவட்ட மருத்துவ கல்லூரி தொடங்க அரசு முன்வர வேண்டும். அரியலூர் மாவட்டத்தில் சிமெண்ட் ஆலைகளுக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.