சென்னை, நவ.9-
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நம் நாட்டில் பொருட்களுக்கு மறைமுகமாக வரியை மத்திய அரசு கலால் வரி, விற்பனை வரி, சேவைகளுக்கு சேவை வரி என வசூலித்து வருகிறது. இந்தியாவில் தயாராகும் அனைத்து பொருட்களுக்கும், வழங்கப்படும் அனைத்து சேவைகளுக்கும் சரக்கு மற்றும் சேவை வரி பொருந்தும். கடந்த மே மாதம் வரை 12.36 சதவீதம் ஆக இருந்த சேவை வரி அதன் பின் கடந்த ஜூன் மாதம் முதல் 14 சதவீதமாக மத்திய பா.ஜ.க அரசு உயர்த்தியது. தற்போது மத்திய அரசு சேவை வரியினை மேலும் 0.5 சதவீதம் உயர்த்தி வரும் 15-ந் தேதி முதல் சேவை வரி 14.5 சதவீதமாக இருக்கும் என அறிவித்திருகிறது. இதனால் பெரிதும் பாதிக்கப்படுவது நடுத்தர மக்களே. எனவே, மத்திய பா.ஜ.க. அரசு உடனடியாக இந்த அறிவிப்பை உடனே திரும்ப பெற வேண்டும்.
மேலும், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியையும் தற்போது மத்திய அரசு உயர்த்தியிருக்கிறது. இதனால் பெட்ரொல், டீசல் விலை உயர்வதோடு, விலைவாசியும் உயர்ந்து பொது மக்கள் மீது சுமையேறும். எனவே, சேவை வரி, கலால் வரி உயர்வு ஆகியவற்றை மத்திய பா.ஜ.க அரசு திரும்ப பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
