#tmctn #gkvasan நாடு முழுவதிலும் உள்ள சுங்கச் சாவடிகளில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும். மேலும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 373 சுங்கச் சாவடிகளை அகற்ற வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் உள்ள லாரி உரிமையாளர்கள் அக்டோபர் 1 ம் தேதியில் இருந்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
நாடு முழுவதும் நேற்று வரை 4 நாட்களாக சுமார் 93 லட்சம் லாரிகள் ஓடவில்லை; தமிழகத்தில் மட்டும் சுமார் 7 லட்சத்துக்கும் மேற்பட்ட லாரிகள் ஓடவில்லை. மேலும் இப்போராட்டத்தினால் லாரி தொழிலில் ஈடுபடுகின்ற பல லட்சம் தொழிலாளர்கள் வேலை இல்லாமல் பெரும் பாதிப்படைந்துள்ளனர். இக்காரணத்தினால் சரக்குகள் பெருமளவில் தேக்கமடைந்துள்ளன. இதனால் மத்திய அரசுக்கு சுமார் 40 ஆயிரம் கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டில் உள்ள சுங்கச் சாவடிகளில் லாரிகள் அதிக நேரம் நின்று செல்லும் சூழல் இருக்கின்றது; மேலும் போக்குவரத்து தொழிலாளர்களுக்கும், சுங்கச் சாவடியில் பணிபுரிவோருக்கும் இடையே வாக்குவாதமும் நடைபெற்று பிரச்சினைகள் அதிகமாகி, பயணிகள் போக்குவரத்தும் பாதிக்கப்படுகின்றது. இதனால் சட்டம், ஒழுங்கும் பாதிக்கின்றது. லாரி உரிமையாளர்களும் இன்று நடைபெறும் பேச்சு வார்த்தையில் அவர்களுக்கு உடன்பாடு ஏற்பட்டு, லாரிகளை இயக்க முன்வர வேண்டும். லாரி உரிமையாளர்களின் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றிட தமிழக அரசு மத்திய அமைச்சரை வலியுறுத்த வேண்டும்.
எனவே மத்திய அமைச்சர் லாரி உரிமையாளர்களின் கோரிக்கைகளை ஏற்று அவர்களின் நலனையும், தொழிலாளர்கள் நலனையும், பொது மக்களின் நலனையும், வர்த்தகம் பாதிக்காமல் இருப்பதையும், மத்திய, மாநில அரசுகளுக்கு வருவாய் இழப்பு ஏற்படாமல் இருப்பதையும் கவனத்தில் கொண்டு இன்று நடைபெறும் பேச்சுவார்த்தையில் ஓர் உடன்பாடு ஏற்பட்டு லாரிகள் வழக்கம் போல் இயங்கிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என்று வலியுறுத்தியுள்ளார்
