85 லட்சம் பேருக்கு வேலை வழங்க தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும்

85 லட்சம் பேருக்கு வேலை வழங்க தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும்:

ஐயா ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

இது தொடர்பாக த.மா.கா. தலைவர் ஐயா ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் இந்திய, வெளிநாட்டு மற்றும் பன்னாட்டு முன்னணி நிறுவனங்கள் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் முதலீடு செய்வது குறித்து ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன.

இதில் சுமார் 12–க்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன என்பது வரவேற்கத்தக்கது.

தமிழகத்தில் பல்வேறு முக்கிய துறைகளில் ஒரு லட்சம் கோடிக்கும் அதிகமான முதலீடுகளை ஈர்க்கும் வகையில் இம்மாநாடு நடைபெறுகிறது.

அவைகள் அனைத்தும் ஒரு காலக்கெடுவிற்குள், விரைவில் நிறைவேற வேண்டும் என்பது தான் மக்களின் எதிர்பார்ப்பாகும்.

பன்னாட்டு நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்காக தொழிற்சாலைகள் மற்றும் அதற்காக தொழிற்பேட்டையும் இங்கே அமைய இருக்கின்றது.

எனவே அவர்களது தொழில் இங்கே நடைபெறும் போது தமிழக அரசு நம் மக்களின் தேவைகளையும், பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.

அதாவது பன்னாட்டு நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கு இங்கே இருக்கின்ற விவசாய நிலங்களை கையகப்படுத்தாமல் விளை நிலங்களைப் பாதுகாத்திட வேண்டும்.

மேலும் விவசாயமற்ற நிலங்களை வாங்கும் போது அந்நில உரிமையாளர்களின் முழு சம்மதத்தோடும், அவர்களது நிலத்துக்கு போதிய விலையும் கொடுக்க வேண்டும்.

மேலும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு நிலம் விற்பவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளித்திட வேண்டும்.

சுற்றுச்சூழல் பாதிக்காத வண்ணம் அந்நிறுவனங்கள் தொழிலை தொடங்கி, நடத்திட வேண்டும்.

தமிழகத்தில் சுமார் 85 லட்சம் பேர் வேலை இல்லாமல் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருக்கின்ற நிலையில் அவர்களுக்கும் அந்நிறுவனங்கள் வேலை வாய்ப்பில் அதிக முக்கியத்துவம் கொடுத்திட தமிழக அரசு கவனம் செலுத்திட வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.