தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறிய சில வார்த்தைகள் இன்றைக்கு மிகவும் பெரிய எதிர்ப்பை உருவாக்கி இருக்கிறது.
ஒரு கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் வார்த்தைகளை மிக கவனமாக பேச வேண்டும்.
அதுவும் வரம்பு மீறிய வார்த்தைகளால் குறிப்பாக அரசின் உயர் பதவியில் இருப்பவர்களை விமர்சிப்பது யாராக இருந்தாலும் எந்த இயக்கத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் மனதை புண்படுத்தும் வகையில் பேசுவது ஏற்புடையது அல்ல.
அரசியல் மாறுபாடுகள், வேறுபட்ட கொள்கை மோதல்கள் இவையெல்லாம் தனி மனிதத் தாக்குதலுக்கு வழி வகுக்கக்கூடாது.
இன்றைய தலைவர்கள் மற்றும் இயக்கங்களின் செயல்பாடுகள் அனைத்தையும் மக்கள் மிகவும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.
நேற்று ஈரோட்டில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தப்போது, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மூத்த தலைவர் நான் வாழ்த்த வயதில்லை அவர் நீண்ட நாள் வாழ வேண்டும் என்றும் என்னைப் பற்றி அவர் உபயோகித்த வார்த்தைகளுக்காக தொண்டர்கள் எந்தவிதமான ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட வேண்டாம் என்றும் கேட்டிருந்தேன்.
நான் மீண்டும் தமிழ் மாநில காங்கிரஸ் நண்பர்களை நான் கேட்டுக்கொள்வது ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடாமல் மதுவுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தில் கவனம் சொலுத்தும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
அதே நேரத்தில் கட்சி அலுவலகம், வீடுகள் போன்றவற்றை முற்றுகை இடுவது கோஷம் இடுவது ஆகியவை தவிர்க்கப்பட வேண்டும்.
தமிழகத்தில் எல்லாவற்றிற்கும் மேலாக அரசியல் நாகரிகத்தை எதிர்பார்க்கும் தமிழ் மாநில காங்கிரசின் வேண்டுகோள் இதுதான்.
ஜி.கே.வாசன்
தலைவர்
தமிழ் மாநில காங்கிரஸ்
