தமிழ்நாடு அரசு–அரசு மற்றும் அரசு சார் நிறுவனங்களில் எழும் காலிப்பணியிடங்களை அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக நிரப்புவது அல்லது வேலை வாய்ப்பு அலுவலகங்களிலிருந்து, பதிவு மூப்பு அடிப்படையிலான பட்டியலை பெற்றுத்தேர்ந்தெடுப்பது என்பது அரசால் அங்கீகரிக்கப்பட்ட நீண்ட காலமாக கடைப்பிடிக்கப்படும் தேர்வு முறை ஆகும். ஆசிரியர் பணிகளுக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு ஆசிரியர் தேர்வாணையம் உருவாக்கப்பட்டது.ஆயினும் அத்தேர்வு ஆணையம் வேலை வாய்ப்பு அலுவலகங்கள் மூலம் பட்டியல் பெறப்பட்டுத்தான் தேர்வு செய்யப்படுகிறது. ஆனால் காவல்துறையில் காவலர், உதவி ஆய்வாளர் போன்ற பணியிடங்களுக்கு கல்வித்தகுதியோடு, உடல் தகுதிகளும் இருப்பதால் விளம்பரம் செய்து தேர்வு செய்யப்படுகிறது.சமீபத்தில் போக்குவரத்துக்கழகங்களில் எழுந்த காலி இடங்களை நிரப்புவதில் விளம்பரம் மூலம் மனுக்கள் பெறுவதும், வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் பட்டியல் பெறுவதுமான இரண்டு வழிகளையும் கடைப்பிடிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் வழிமுறை வகுத்து தந்துள்ளது.அம்முறை கடைப்பிடிக்கப்பட்டது. இதனால் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து பல ஆண்டுகள் காத்திருந்தவர்களின் முன்பதிவுக்கும், முன் உரிமைக்கும் முழுமையான அங்கீகாரம் இல்லாமல் போகிறது. இதனால் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வதால் பெரும் பயன் எதுவும் இல்லையோ என்ற எண்ணம் இளைஞர்கள் மனதில் ஏற்பட வாய்ப்பு உள்ளது
தமிழ்நாட்டில் சுமார் 94 லட்சம் இளைஞர்கள் படித்தவர்கள், பட்டதாரிகள், பயிற்சி பெற்றவர்கள், உயர்கல்வி பெற்றவர்கள் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து வேலைக்காக காத்திருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் என்றாவது ஒரு நாள் தனக்கு வேலை வாய்ப்பு வரும் என்ற நம்பிக்கையோடு இருக்கிறார்கள்.புதிய இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும் என்றாலும், ஏற்கனவே வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து பல ஆண்டு காலம் வேலை இல்லாமல் காத்திருப்பவர்களையும் கருத்தில் கொள்ள வேண்டும். ஆகவே தமிழ்நாடு அரசு இது தொடர்பாக நன்கு ஆய்வு செய்ய வேண்டும்.அதன் மூலம் தமிழக அரசு பணியாளர் தேர்வு ஆணையம் மூலம் நிரப்பப்படும் பணி இடங்களை தவிர பிற பணி இடங்களை நிரப்புவதற்கு வேலை வாய்ப்பு அலுவலகங்கள் மூலம் பட்டியல் பெற்று, காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்ற ஆணையை பெற முயற்சிக்க வேண்டும்.அதே போல் அரசு மற்றும் அரசு சார் அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்களை முழுமையாக கணக்கிட்டு அப்பணியிடங்களை விரைவாக நிரப்புவதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதன் மூலம் படித்த, பயிற்சி பெற்ற, தகுதி வாய்ந்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
