கரும்புக்கு அரசு அறிவித்துள்ள ஆதார விலை ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரியில் அவர் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:
கரும்புக்கு மத்திய, மாநில அரசுகள் ஆதார விலையாக டன்னுக்கு ரூ.2,650 அறிவித்துள்ளது ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. கரும்பு விவசாயிகள் கோரியபடி, டன்னுக்கு ரூ.3,500 வழங்க வேண்டும். காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டுவது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது. உச்ச நீதிமன்ற உத்தரவுபடி, கர்நாடக அரசு செயல்பட வேண்டும்.
மாற்றத்தைத் தருவார் என்ற எதிர்பார்ப்பில் பா.ஜ.க.வுக்கு மக்கள் வாக்களித்தனர். ஆனால், பா.ஜ.க. அரசு வாக்களித்த மக்களுக்கு ஏமாற்றத்தைத் தந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில், வேப்பனஅள்ளி அருகே கிடப்பில் போடப்பட்டுள்ள சிங்கிரிப்பள்ளி அணைக் கட்டும் பணியை விரைந்து தொடங்க வேண்டும். இதன் மூலம் அந்தப் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதுடன், பல ஏக்கர் விளைநிலம் பாசன வசதி பெறும்.
மந்தகதியில் நடைபெறும் கிருஷ்ணகிரி – புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலை திட்டப் பணியை விரைவுபடுத்த வேண்டும். பருவ மழை பொய்த்துள்ள நிலையில், கிருஷ்ணகிரியை வறட்சி மாவட்டமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.
கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து ஆந்திர மாநிலம், குப்பத்துக்குச் செல்லும் வழியில் உள்ள தமிழகப் பகுதியில் காணப்படும் பள்ளத்தாக்கில் அணை கட்டுவதன் மூலம் வீணாகும் மழை நீரைச் சேமிக்க முடியும்.
கடந்த காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கிருஷ்ணகிரி வழியாக ரயில் பாதை அமைக்காதது வருத்தம் அளிப்பதாக உள்ளது. தற்போது ஆளும் மத்திய அரசு இதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
