தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தல் குறித்து வேலூர் மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம் நேற்று வேலூரில் நடந்தது. கூட்டத்தில், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: ஒரேயொரு தொகுதிக்கு தேர்தல் நடத்த முடியாமல் தேர்தல் ஆணையம் தோல்வியடைந்துள்ளது. இந்த செயல் தேர்தல் ஆணையத்தின் இயலாமையை காட்டுகிறது. பணம் பட்டுவாடா நடப்பது தெரிந்தும் தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளாமல் பெயரளவுக்கு சோதனைகளை மேற்கொண்டனர்.
ஜனநாயகத்தை மறந்து பணநாயகத்தை நம்பி தேர்தலில் நின்ற ஆளுங்கட்சியின் இழிவான செயலால் தமிழகத்திற்கு மிகப்பெரிய தலைகுனிவு ஏற்பட்டுள்ளது. பணத்தால் தேர்தலில் ஜெயித்துவிடலாம் என்று பகல் கனவு கண்ட அரசியல்வாதிகளுக்கு இந்த தேர்தல் ரத்து என்பது ஒரு பலத்த அடி என்றே கூறவேண்டும். தமிழக முதல்வர் இன்னும் டெல்லி சென்று விவசாயிகளை சந்திக்காதது வேதனையாக உள்ளது. உள்ளாட்சி தேர்தலில் ஓபிஎஸ் அணியுடன் கூட்டணி சேர்ந்து தமாகா அதிக இடங்களை கைப்பற்றும் என்றார்.
