ரே‌ஷன் கடைகளில் பொருட்கள் தட்டுபாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜி.கே.வாசன்

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழகத்தில் ரே‌ஷன் கடைகள் திறந்திருக்கும் நாட்களில் ரே‌ஷன் கார்டு வைத்திருப்போர்களுக்கு பொது விநியோகத் திட்டத்தின் அடிப்படையில் ரே‌ஷன் பொருள்கள் ஒரே நாளிலோ அல்லது பிற நாட்களிலோ முழுமையாக கிடைப்பதில்லை.

மாதத்தில் முதல் 4 அல்லது 5 நாட்களுக்குள் மட்டுமே ரே‌ஷன் பொருள்கள் கிடைக்கின்றது. அதுவும் முழுமையாக கிடைப்பதில்லை என்றே பொதுமக்கள் குறை கூறுகின்றனர். மற்ற நாட்களில் சென்றால் சில பொருள்கள் கிடைக்கும், பல பொருள்கள் அந்த மாதத்திற்குள் கிடைக்காது.

முக்கியமாக பருப்பு வகைகள், கோதுமை, மண் எண்ணெய், பாமாயில் போன்றவற்றிற்கு ரே‌ஷன் கடைகளில் தட்டுப்பாடு உள்ளது. இதனால் பெருமளவு பாதிக்கப்படுவது ஏழை, எளிய, நடுத்தர மக்கள் தான்.

தமிழகத்தில் சுமார் 2 கோடி ரே‌ஷன் கார்டுகள் உள்ளன. நகரம், கிராமம் என அனைத்துப் பகுதிகளிலும் உள்ள ரே‌ஷன் கடைகளில் மானிய விலையில் விநியோகிக்கப்படும் உணவுப் பொருள்களில் பலவற்றை கார்டுக்கு உரியவர்களுக்கு வழங்காமல் வெளியில் மற்றவர்களுக்கு அதிக விலைக்கு விற்கிறார்கள். குறிப்பாக அரிசி, மண்ணெண்ணெய் ஆகியவற்றை பதுக்கி, கள்ளச் சந்தையில் விற்கின்றனர்.

முக்கியமாக ரே‌ஷன் கார்டு வைத்திருந்தும் பொருள்கள் வாங்காமல் இருப்பவர்களின் கார்டுக்கு உரிய சில பொருள்களை அவர்கள் வாங்கியதாக கணக்கு காட்டி, வெளிச் சந்தையில் விற்பது அதிகரித்துக்கொண்டே போகிறது.

சில ரே‌ஷன் கடைகளில் தங்களுக்கு வேண்டிய மளிகைப் பொருள்களை மட்டுமே வாங்க வருபவர்களிடம் மற்ற சில மளிகைப் பொருள்களை குறிப்பாக சோப்பு, உப்பு, தேங்காய் எண்ணெய், டீ தூள் போன்றவற்றை வாங்கவும் கட்டாயப்படுத்துகிறார்கள்.

இது போன்ற பல்வேறு குறைபாடுகள் கடந்த பல மாதங்களாக தமிழகம் முழுவதும் ஆங்காங்கே உள்ள ரே‌ஷன் கடைகளில் நிலவி வருகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *