அனைத்து கட்சி தலைவர்கள் பிரதமர்- ஜனாதிபதியை சந்திக்கவேண்டும்: த.மா.கா. மாநில செயற்குழுவில் தீர்மானம்

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் மற்றும் மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள் கூட்டம் திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் ஓட்டலில் நடந்தது.

கூட்டத்திற்கு கட்சியின் மாநில தலைவர் ஜி.கே.வாசன் தலைமை தாங்கினார். மாநில நிர்வாகிகள் ஞானதேசிகன், என்.எஸ்.வி. சித்தன், கோவை தங்கம், விடியல் சேகர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விபரம் வருமாறு:-

தமிழகத்தில் தற்போது கடுமையான வறட்சி நிலவி வருகிறது. இதனால் ஏற்படும் விவசாயிகளின் தற்கொலையை தடுப்பதற்கும் அவர்களை பாதுகாப்பதற்கும் விவசாய கடன்களை வட்டியுடன் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்.

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பெருக்க காவிரி, கொள்ளிடத்தில் தடுப்பணைகள் கட்ட வேண்டும். மீனவர்களுக்கு மாதம் 5 ஆயிரம் லிட்டர் டீசல் மானியமாக வழங்க வேண்டும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் மாவட்டந்தோறும் புதிய தொழிற்சாலைகள் தொடங்க வேண்டும்.

பாலாறு மற்றும் சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரளா, ஆந்திரா அரசுகள் தடுப்பணை கட்டுவதை கைவிட வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்கு கூட்டு குழு அமைத்திட வேண்டும். காவிரி பிரச்சனையை தீர்ப்பதற்கு தமிழக அரசு அனைத்து கட்சி தலைவர்கள், எம்.பி.க்கள் கூட்டத்தை கூட்டி பிரதமர் மற்றும் குடியரசு தலைவரை சந்திக்க வேண்டும்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தை வெற்றிபெறச் செய்த மாணவர்கள், இளைஞர்கள் அவர்களுக்கு உறுதுணையாக இருந்து பொது மக்களுக்கு பாராட்டு தெரிவிப்பது, ஜல்லிக்கட்டு அனுமதிக்காக அலங்காநல்லூர் வாடிவாசலில் ஆர்ப்பாட்டம், சென்னையில் மனித சங்கிலி போராட்டம் நடத்திய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினருக்கு பாராட்டு தெரிவிப்பது.

சென்னையை மழை, வெள்ளத்தில் இருந்து பாதுகாத்திட போர்க்கால அடிப்படையில் குளம், குட்டைகளை தூர்வார வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக த.மா.கா.வின் மாற்றியமைக்கப்பட்ட கட்சி கொடியை ஜி.கே.வாசன் அறிமுகப்படுத்தினார்.

கூட்டத்தில் திருச்சி மாவட்ட தலைவர்கள் நந்தா செந்தில்வேல், குணா, ரவீந்திரன், மாநில செயற்குழு உறுப்பினர் கொட்டிவாக்கம் முருகன், மாநில பொதுச்செயலாளர் கராத்தே முத்துக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். 201702211554334796_Tamil-Maanila-Congress-Working-Committee-Resolution-to-All_SECVPF

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *