பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் – ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

தமாகா தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தின் புதிய முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பேற்று ஆட்சி புரிந்து கொண்டிருக்கிறார். இத்தகைய வேளையிலே ஏற்கனவே அதிமுகவின் தலைமை தேர்தல் பிரசாரத்தின்போது அளித்த வாக்குறுதிகளை தற்போதைய ஆட்சியாளர்கள் நிறைவேற்ற முன்வர வேண்டும். படிப்படியாக தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த மறைந்த முதல்வர் ஜெயலலிதா எடுத்த நடவடிக்கையால் முதல் கட்டமாக 500 மதுக்கடைகள் மூடப்பட்டு, மற்ற மதுக்கடைகள் திறந்திருக்கும் நேரமும் குறைக்கப்பட்டது. இருப்பினும் இன்னும் ஏராளமாக மதுக்கடைகள் உள்ளதால் மது குடிக்கின்றவர்களும், புதிதாக மதுக்கடைகளை தேடி செல்பவர்களும் மதுவினால் சீரழிகிறார்கள். வருங்கால சந்ததியினரும் பெரும் பாதிப்புக்குள்ளாவார்கள்.

உச்சநீதிமன்றம் வரும் மார்ச் 31ம் தேதிக்குள் நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூடவேண்டும் என்று உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கியிருப்பதை தமிழக அரசு கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும். தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், கோயில்கள், ஆலயங்கள், மசூதிகள், பேருந்து நிலையம், ரயில் நிலையம், பெண்கள் அதிகம் கூடும் இடங்கள் போன்றவற்றிற்கு அருகில் உள்ள மதுக்கடைகளை உடனடியாக அகற்றிட வேண்டும். அதன் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் உள்ள மதுக்கடைகளை காலம் தாழ்த்தாமல் படிப்படியாக, முற்றிலுமாக மூட தொடர் நடவடிக்கை எடுத்து, தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். – See more at: http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=101501#sthash.vKm54MI7.dpuf

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *