மாற்றுத்திறனாளிகள் நலனுக்கான புதிய மசோதாவை நாடாளுமன்றத்தில் விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில்,
1995-ஆம் ஆண்டு மாற்றுத்திறனாளிகள் நலன், உரிமைகள் பாதுகாக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அந்தச் சட்டத்தில் உள்ள குறைபாடுகளை நீக்கி, புதிய மசோதாவைத் தயாரிக்கும் பணி பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த வரைவு மசோதா குறித்து நாடாளுமன்ற நிலைக்குழுவும் பரிந்துரை அளித்துள்ளது. எனினும், மசோதாவை நிறைவேற்ற அரசு தயக்கமும், சுணக்கமும் காட்டுகிறது.
இந்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விரைவில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும். மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீடு அரசு, தனியார் துறைகளில் முறையாகக் கடைப்பிடிக்கப்படுகிறதா என்பதை மத்திய, மாநில அரசுகள் ஆண்டுதோறும் ஆய்வு செய்ய வேண்டும்.
அரசு அலுவலகங்கள், பொதுக் கட்டடங்களை மாற்றுத்திறனாளிகள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில், சாய்தள வசதி, மின் தூக்கி, கழிப்பறைகள் ஆகியவை போதுமான அளவில் அமைக்கப்படவில்லை. இது போன்ற பிரச்னைகளில் மத்திய, மாநில அரசுகள், தனியார் நிறுவனங்கள் ஆகியவை தனிக்கவனம் செலுத்தி மாற்றுத்திறனாளிகளின் நலன் காக்க பாடுபட வேண்டும் என்று இவ்வாறு கூறியுள்ளார்.
