3 தொகுதி தேர்தலில் த.மா.கா. போட்டி இல்லை: ஜி.கே.வாசன் அறிவிப்பு

சென்னை, மூன்று தொகுதிகளுக்கான தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியிடவில்லை என ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழகத்தில் கடந்த சட்டமன்ற தேர்தலில் தேர்தல் நடைபெறாமல் போன தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகளுக்கான தேர்தலும் திருப்பரங் குன்றம் தொகுதிக்கான இடைத்தேர்தலும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. நடைபெற இருக்கின்ற இந்த தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியிடுவது குறித்து கடந்த 5 நாட்களாக கட்சிக்குள் கருத்துக்களை கேட்டறிந்தோம்.தமிழ் மாநில காங்கிரஸ் ஒரு வலுவான அரசியல் கட்சியாக வளர்ந்து வருகிறது. அதனை மேம்படுத்தும் அனைத்து விதமான நல்ல முயற்சிகளிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறது. இடைத்தேர்தல்களில் அரசியல் கட்சிகள் போட்டியிடாமல் இருப்பது என்பது புதிதல்ல. இவைகளையெல்லாம் கருத்தில் கொண்டு நடைபெற இருக்கின்ற தஞ்சாவூர், அரவக்குறிச்சி மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளுக்கான தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியிடவில்லை என்ற முடிவை நாங்கள் எடுத்திருக்கின்றோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.இந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை. த.மா.கா. தொண்டர்கள் மனசாட்சிப்படி ஓட்டுப் போடுவார்கள்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *