சென்னை, ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனைகளுக்கு ஜி.கே.வாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீராங்கனை சாக்ஷி மாலிக் மல்யுத்த போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.அதே போல பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து அரை இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருப்பது நமக்கெல்லாம் மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் இறுதிப்போட்டியில் தங்கப் பதக்கம் வெல்ல வேண்டும் என்பது தான் ஒட்டு மொத்த இந்தியர்களின் எதிர்பார்ப்பாகும்.சாக்ஷி மாலிக் வெண்கலப் பதக்க வெற்றியும், பி.வி. சிந்து இறுதி போட்டிக்கு சென்றிருப்பதற்கான முன்னேற்றமும், தீபா கர்மாகர் அவர்கள் இறுதிப் போட்டிவரை மேற் கொண்ட பயணமும் அளவிடற்கரியது. பல்வேறு விருதுகளைப் பெற்று நாட்டிற்கு மேன்மேலும் புகழும், பெருமையும் சேர்க்க வேண்டும்.ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்ட அனைத்து இந்திய வீரர், வீராங்கனைகளுக்கும், அவர்களுக்கு பயிற்சி அளித்த பயிற்சியாளர்களுக்கும் வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.
இவ்வாறு ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
