நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காத கர்நாடக அரசு மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தினார்.
ஈரோட்டில் அவர் செய்தியாளர்களுக்கு புதன்கிழமை அளித்த பேட்டி:
தமிழக உள்ளாட்சித் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளில் தமாகா இறங்கி உள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் சூழ்நிலைக்கு ஏற்ப, காலதாமதமன்றி கூட்டணி குறித்து அறிவிப்போம்.
கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது சுதந்திர தின உரையில் மேக்கேதாட்டுவில் காவிரியின் குறுக்கே அணை கட்ட ரூ. 5,100 கோடி ஒதுக்கப்போவதாக அறிவித்துள்ளார். மைசூரு, பெங்களூரு குடிநீர்த் திட்டத்துக்கு ரூ. 400 கோடி ஒதுக்கப்படவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இது தமிழகத்துக்கு காவிரி நீரில் ஒரு சொட்டுகூட கொடுக்கக் கூடாது என்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை ஆகும். மத்திய அரசின் உத்தரவுகளையும், உச்ச நீதிமன்றம் மற்றும் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்புகளையும் கர்நாடக அரசு மதிப்பதில்லை. யாருடைய உத்தரவையும் மதிக்காமல் செயல்படும் கர்நாடக அரசு மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜல்லிக்கட்டு தமிழர்களின் வீர விளையாட்டு. இதற்கு எதிராக மத்திய அமைச்சர் மேனகா காந்தி பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது. அடுத்த ஆண்டு, ஜல்லிக்கட்டு நடைபெறும் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியிருப்பது வரவேற்புக்குரியது.
மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிப்பது எதிர்க்கட்சித் தலைவரின் கடமை. அந்தக் கடமையை திமுக சரியாக செய்து வருகிறது. எதிர்க்கட்சித் தலைவருக்கு
