அகில இந்திய வானொலி மண்டல செய்திப்பிரிவு அலுவலகங்கள் தொடர்ந்து இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜி.கே.வாசன்

அகில இந்திய வானொலி மண்டல செய்திப்பிரிவு அலுவலகங்கள் தொடர்ந்து இயங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”நம் நாட்டில் வானொலி நிலையம் 1927 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 1936 ஆம் ஆண்டிலிருந்து அகில இந்திய அளவில் வானொலி காலூன்றியது. இந்தியா சுதந்திரம் அடையும் போது 6 வானொலி நிலையங்கள் இருந்தன.

அன்றைய காலகட்டத்தில் இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் 2.5 சதவிகித இடத்திற்கு மட்டுமே வானொலி ஒலிபரப்பு சென்றடைந்து கொண்டிருந்தது. இதன் மூலம் அப்பொழுது 11 சதவீத மக்கள் மட்டுமே வானொலி ஒலிபரப்பை கேட்கும் நிலையில் இருந்தார்கள். இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான வானொலி நிலையங்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படுத்தப்படும் வானொலி நிலையங்களாகும். இது தவிர மேலும் தனியார் நடத்தி வரும் வானொலி நிலையங்களும் உள்ளன.

தற்போது நாடு முழுவதும் 44 தலைமை மற்றும் மண்டல செய்திப்பிரிவு அலுவலகங்கள் உள்ளன. அகில இந்திய வானொலி நிலையத்தின் 22 மண்டல செய்திப்பிரிவு அலுவலகங்கள் விரைவில் மூடப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்திய அரசு இந்த முடிவினை கைவிட வேண்டும்.

காரணம் நம் நாட்டில் வானொலியின் சேவை சுமார் 88 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பாரம்பரியம் கொண்டது. மேலும் அந்த மண்டல செய்திப் பிரிவில் பணிபுரியும் உதவி இயக்குநர்கள், செய்தியாளர்களை பணியிட மாற்றம் செய்திருக்கிறார்கள். ஆனால் அந்த பணியிட மாற்றத்திற்கான உத்தரவில் பணியிடத்திற்கான எந்தவிதக் குறிப்பும் இல்லை. இது பணியாளர்கள் மத்தியில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசின் இந்த முடிவினால் நாட்டில் நடைபெறும் அன்றாட நிகழ்வுகள், அரசு நிகழ்ச்சிகள், உள்ளூர் பிரச்சினைகள், அரசு சார்ந்த திட்டங்கள் குறித்த அறிவிப்புகள், வானிலை நிலவரம் போன்ற பல்வேறு முக்கியச் செய்திகளை உள்ளூர் மக்கள் அகில இந்திய வானொலி மூலம் கேட்டுப் பயன்பெற முடியாத நிலை ஏற்படும்.

மேலும் நாட்டில் உள்ள பல்வேறு மாநில மொழிகளில், பல்வேறு தரப்பட்ட செய்திகளை அனைத்து மாநில மக்களுக்கும் ஒலிபரப்பி வருவதால் வானொலிக்கு தனிச்சிறப்பு உண்டு. குறிப்பாக கிராமப்புற மக்களுக்கு நாள்தோறும் சிறந்த பயனுள்ள, பொழுதுபோக்கு ஊடகம் என்றால் அது அகில இந்திய வானொலி தான். நவீன தொழில்நுட்பத்துடன், பண்பலை ஒலிபரப்புடன், இணையதள சேவையும் வழங்கப்பட்டு வருகிறது.

இன்றைய காலகட்டத்தில் சுமார் 98 சதவீத மக்கள் வானொலி ஒலிபரப்பைக் கேட்கிறார்கள். எனவே அகில இந்திய வானொலி நிலையத்தையும், செயல்பாட்டுத்திறனையும், சேவையையும் அதிகரிக்க வேண்டிய முயற்சிகளில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் ஈடுபட வேண்டும். அதன் மூலம் வானொலியில் வேலை வாய்ப்பினை உருவாக்குவதோடு, நாட்டு மக்கள் வானொலியின் சேவையினை பெற்று பயன்பெறுவார்கள்.

அகில இந்திய வானொலி மண்டல செய்திப்பிரிவு அலுவலகங்களை மூடுவதின் மூலம் மண்டலச் செய்திகள் கிராமப்புற மக்களை முழுமையாக சென்றடையாது. எனவே அகில இந்திய வானொலி மண்டல செய்திப்பிரிவு அலுவலகங்கள் தொடர்ந்து இயங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று இவ்வாறு வாசன் அதில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *