மத்திய ரயில்வே அமைச்சகம் ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கும், ரயிலில் கொண்டுவரப்படும் பொருட்களுக்கும் பாதுகாப்பினை உறுதி செய்துகொள்ள வேண்டிய நடவடிக்கையை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”தமிழகத்தில் சேலத்தில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்த பணம் திருடு போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த ரயிலில் ரிசர்வ் வங்கிக்கு சொந்தமான ரூ.342 கோடி பணம், பெட்டிகளில் அடைக்கப்பட்டு கொண்டுவரப்பட்டது.
ரயில் வரும் வழியில் பணம் இருந்த பெட்டியின் மேற்கூரையை உடைத்து சுமார் 16 பெட்டிகளில் இருந்த ரூ.5.75 கோடி பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துள்ளனர். ரயிலில் ரிசர்வ் வங்கிக்கு சொந்தமான பணம் அனுப்பப்படும்போது, அதற்கான தகவலை உரிய அதிகாரிகளிடம் தெரியப்படுத்தி, தேவையான பாதுகாப்பு அம்சங்களுடன் அப்பணத்தை கொண்டு பத்திரமாக சேர்க்க வேண்டியது வங்கி அதிகாரிகள், காவல் துறையினர், ரயில்வே நிர்வாகம் ஆகியோரின் கடமை.
வட மாநிலங்களில் கூட இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கும் போது, தமிழகத்தில் நடைபெற்றிருப்பது, திட்டமிட்டு நடத்தப்பட்ட சதிச்செயலாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் ரயிலில் பயணம் செய்வதற்கு மக்கள் மத்தியில் அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது.
அதே போல ரயிலில் கொண்டு சென்ற பணம் குறித்த தகவல் கொள்ளையர்களுக்கு எப்படி முன்கூட்டியே தெரியவந்தது என்ற காரணத்தைக் கண்டுபிடிக்க வேண்டும். இந்த கொள்ளை சம்பவத்தை முழுமையாக விசாரித்து, உண்மை நிலையை கண்டறிந்து, பணத்தை முழுமையாக மீட்க வேண்டும். குற்றம் புரிந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு சட்டத்தின் அடிப்படையில் கடுமையான தண்டனைப் பெற்றுத் தர வேண்டும்.
மேலும் ரயிலில் பயணம் செய்பவர்கள், ரயில் நிலையங்களில் காத்திருப்பவர்கள், பயணிகளை வழி அனுப்ப வருபவர்கள் ஆகிய அனைவருக்கும் ரயில் நிலைய வளாகத்தில் 24 மணி நேரமும் உரிய பாதுகாப்பு, அடிப்படை வசதிகள் வழங்க அனைத்து நடவடிக்கையையும் மத்திய ரயில்வே அமைச்சகம் எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் தொடர்ந்து நடைபெறும் கொலை, கொள்ளை, திருட்டு போன்ற சம்பவங்களை தடுத்து நிறுத்தக் கூடிய தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகளை தமிழக காவல் துறை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் இனிமேலும் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது தமிழக அரசின் கடமை” என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
