ஆந்திர சிறையிலுள்ள தமிழர்களுக்கு நியாயம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து 29 பேர், வேலூர் மாவட்டத்திலிருந்து 2 பேர், சென்னையிலிருந்து ஒருவர் என மொத்தம் 32 பேர் திருப்பதிக்கு சென்றபோது அங்கே அவர்களை ஆந்திர காவல்துறை கைது செய்திருக்கிறது.
ஆந்திர காவல் துறையினரின் இந்தச் செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது. காரணம் கூலி வேலைக்குச் செல்லும் தொழிலாளர்கள் மீது சந்தேகத்தின் பேரில் அவர்களை பார்க்கும் இடங்களில் எல்லாம் விசாரணை என்ற பெயரில் கைது செய்து, சிறையில் அடைக்கிறார்கள்.
ஏற்கெனவே இதுபோன்று சுமார் 450-க்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்களை ஆந்திர காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்தது. அதன்பின் 2 ஆண்டுகளுக்கு பின் நீதிமன்றத்தால் இவர்கள் குற்றமற்றவர்கள் என தீர்ப்பு வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.
ஆந்திர அரசு செம்மரம் கடத்துவோர் மீதுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு பதிலாக அப்பாவி கூலித் தொழிலாளர்கள் மீது வீண்பழி போடுவது மிகவும் தவறானது. ஆந்திர அரசின் இதுபோன்ற நியாயமற்ற செயலை தமிழக அரசு கண்டிக்க வேண்டும்.
மேலும், தமிழக அரசு ஆந்திர அரசோடு பேசி இனி ஒருபோதும் அப்பாவித் தமிழர்களை துன்புறுத்தவோ, கைது செய்யவோ, சிறையில் அடைக்கவோ கூடாது. ஆந்திர சிறையில் குற்றமற்ற நிலையில் வாடுகிற தமிழர்களை ஆந்திர அரசு விடுவிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசிடம் ஆந்திர அரசின் மனிதாபிமானமற்ற இச்செயலை தமிழக அரசு எடுத்துக் கூறி இனிமேல் இது போன்ற செயல்களில் ஆந்திர அரசு ஈடுபடக்கூடாது என்பதை உறுதிப்படத் தெரிவித்துக் கொள்ள வேண்டும்.
மத்திய அரசும் ஆந்திர அரசோடு தொடர்பு கொண்டு ஆந்திர சிறையில் வாடுகின்ற அப்பாவித் தமிழர்களுக்கு நியாயம் கிடைக்க வழி வகை செய்ய வேண்டும் என தனது அறிக்கையில் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
