வங்கி ஊழியர்கள் சங்கத்தின் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்று ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்ட அறிக்கை: ஸ்டேட் வங்கி தவிர அதன் துணை வங்கிகள் நாளையும், நாளை மறுநாள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளும் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் மேற்கொள்ள இருப்பதாக வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்கள் தெரிவித்துள்ளன. அப்படி வேலை நிறுத்தம் நடைபெற்றால் துணை வங்கிகளைச் சேர்ந்த சுமார் 45 ஆயிரம் ஊழியர்களும், தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஊழியர்கள் மற்றும் குறிப்பிட்ட தனியார் வங்கி ஊழியர்களும் பங்கேற்பார்கள் என தெரிவித்துள்ளனர்.
இவர்களின் வேலை நிறுத்தத்தால் அன்றாடம் நடைபெறும் வங்கிப்பணிகள் பெருமளவு பாதிக்கப்படும். வங்கியில் கணக்கு வைத்திருப்போருக்கு குறிப்பாக வயது முதிர்ந்தவர்கள், பெண்கள் ஆகியோருக்கு திடீரென்று பணம் தேவைப்பட்டால் அவர்கள் பணப் பரிமாற்றம் செய்ய முடியாமல் பாதிக்கப்படுவார்கள். மேலும் வங்கிகளின் மூலம் அரசுக்கு அன்றாடம் கிடைக்கப்பெறுகின்ற ரொக்கத்தொகை குறைந்து, வருமான இழப்பும் ஏற்படும்.
எனவே மத்திய அரசு – வங்கிகளில் பணப் பரிமாற்றம் செய்வோர் மற்றும் அரசின் வருவாய் ஆகியவற்றைக் கவனத்தில் கொண்டு, வங்கி ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டும். அதன் அடிப்படையில் வங்கிகள் அரசின் கட்டுப்பாட்டில், நிர்வாகத்திறமையோடு, வாராக்கடன்களையும் வசூல் செய்து நாட்டு மக்கள் நலன், நாட்டின் வளர்ச்சி ஆகியவற்றை உறுதி செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
