கூட்டுறவுப் பயிர்க் கடன் தள்ளுபடியில் உள்ள குளறுபடிகளைக் களைய வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
ஈரோடு, நாமக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்ற மண்டல அளவிலான தமாகா நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெறாவிட்டாலும், அதைப் படிப்பினையாக உணர்ந்து, கட்சியை வலுப்படுத்தி வருகிறோம். இதற்காக, 12 மண்டலங்களில் ஜூலை 25-ஆம் தேதி வரை கூட்டம் நடத்தி நிர்வாகிகளிடம் கருத்து கேட்டு, பலமான இயக்கமாக மாற்றி வருகிறோம்.
உள்ளாட்சித் தேர்தலில் தனியாகப் போட்டியிட சாத்தியம் உள்ளதா என்பது குறித்து நிர்வாகிகள் தெரிவிக்கும் கருத்துக்குப் பின் முடிவு செய்யப்படும். பயிர்க் கடன் ரூ. 5 ஆயிரத்து 780 கோடி தள்ளுபடி செய்யப்பட்டாலும், இதில் உள்ள குளறுபடிகளைக் களைய வேண்டும். கூட்டுறவு வங்கிகளில் உள்ள அனைத்து விவசாயக் கடன்களையும் தள்ளுபடி செய்யவேண்டும்.
உள்ளாட்சிகளுக்கான அதிகாரத்தை மத்திய அரசு பறிக்கக்கூடாது. பஞ்சாயத்துராஜ் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறையை முடக்கக்கூடாது. பாலாற்றின் குறுக்கே உள்ள அணையின் உயரத்தை உயர்த்துவதை, ஆந்திர அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும். இதை நிறுத்த, மத்திய அரசு மூலமாக தமிழக அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றார்.
இக்கூட்டத்தில் தமாகா மாநில துணைத் தலைவர் ஆர்.ஆறுமுகம், இளைஞர் அணித் தலைவர் எம்.யுவராஜா, மாநிலச் செயற்குழு உறுப்பினர் எஸ்.டி.சந்திரசேகர், மத்திய மாவட்டத் தலைவர் பி.விஜயகுமார் உள்பட பலர் பங்கேற்றனர்.
