சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழக முதல்வர் நாளை டெல்லியில் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பின் மூலம் தமிழகத்தில் நிலுவையில் உள்ள பல்வேறுப் பிரச்னைகளுக்கு நிரந்தர, சுமூகத் தீர்வு எட்டப்பட வேண்டும்.குறிப்பாக ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பது வழக்கம். இந்த ஆண்டு தண்ணீர் திறக்கப்படாததால், 12 மாவட்ட விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்ட குறுவை சாகுபடி பயிர்கள் சேதமடையும் நிலையில் உள்ளன.
இதற்கு முக்கிய காரணம் கர்நாடக அரசு காவிரியிலிருந்து தமிழகத்துக்கு உரிய நேரத்தில், உரிய தண்னீரை திறந்துவிடாமல் இருப்பது தான். எனவே முதல்வர் ஜெயலலிதா காவிரி பிரச்னைத் தொடர்பாக பிரதமரிடம் முறையிடும் போது, காவிரி நடுவர்மன்றத் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் நதிநீர் ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றை உடனடியாக அமைத்து காவிரிப் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்த வேண்டும்.
மேலும் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளில் அனைத்து தரப்பு விவசாயிகள் வாங்கிய விவசாயக் கடனை மத்திய அரசு முழுமையாக தள்ளுபடி செய்திட வலியுறுத்த வேண்டும். மாணவர்களின் கல்விக் கடனை தள்ளுபடி செய்யவும், சுலபமாக மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்கவும் வலியுறுத்த வேண்டும். மேலும் கர்நாடகம் மேகதாதுவில் தடுப்பணைக் கட்டும் முயற்சியையும் தடுத்து நிறுத்த வற்புறுத்த வேண்டும். முல்லைப் பெரியாறு பிரச்சனையில் தமிழகத்துக்கு நியாயம் கிடைக்க வேண்டும். கச்சத்தீவு ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்யவும் மத்திய அரசுக்கு அதிக அழுத்தம் கொடுக்க வேண்டும். தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் உள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையிலும் இந்த சந்திப்பு அமைய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். – See more at: http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=94034#sthash.ZEkgVzXg.dpuf
