மதுரை வடக்குத் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் முஜிபுர் ரஹ்மானை ஆதரித்து பீ.பீ.குளத்தில் ஜி.கே.வாசன் பிரச்சாரம் செய்தார்.அப்போது பேசிய அவர், ”ஆட்சி மாறவேண்டுமென்றால் அதிமுக போய் திமுகவருவது அல்ல. ஆட்கள் மாறியோ, கட்சிகள் மாறியோ பலனில்லை. கொள்கைகளில் மாற்றம் வேண்டும்.
பொதுவாழ்க்கையில் தூய்மையைக் கடைப்பிடிக்கும், நேர்மையான வெளிப்படையான ஆட்சியைத் தரும் தேமுதிக-மக்கள் நலக்கூட்டணி-தமாகா அணி வெற்றிபெறுவதன் மூலமே இருண்ட தமிழகத்தை, சீரழிந்த தமிழகத்தை மீட்க முடியும். 50 ஆண்டுகளாக தமிழகத்தை மாறி மாறி ஆண்ட திமுக, அதிமுக கட்சிகளால் தமிழகம் பின்னடைவைச் சந்தித்துள்ளது.
வளர்ச்சிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. தேர்தலில் வெற்றி பெற்று நாங்கள் கூட்டணி ஆட்சி அமைப்போம். ஆறு தலைவர்களைக் கொண்ட கூட்டணி, இன்று ஏறுமுகத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. தேர்தலில் வெற்றி பெற்று வெற்றிமுகத்துடன் தமிழகத்தை வழி நடத்துவோம்.
110-விதியின் கீழ் சட்டமன்றத்தில் பல்வேறு திட்டங்களை அறிவித்த தமிழக முதல்வர், அதே அறிக்கையை வாக்காளர்களிடமும் வாசித்துக் கொண்டிருக்கிறார். தேர்தலில் மக்களின் வரிப்பணத்தை பங்குபோட்ட திமுக-அதிமுக ஊழல் சாம்ராஜ்யத்திற்கு வாக்காளர்கள் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்” என்றார்.
