ஜனாதிபதி ஆற்றிய உரை மக்களின் எண்ணங்களை முழுமையாக பிரதிபலிப்பதாக அமையவில்லை: ஜி.கே.வாசன்

சென்னை, பிப். 24–

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரையில் நாட்டில் நிலவும் வேலையில்லாத் திண்டாட்டத்தை போக்கி, புதிய வேலை வாய்ப்பை உருவாக்குவதற்கான சிறப்புத் திட்டங்கள் இடம் பெறவில்லை. மேலும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கும், வேளாண் தொழிலை மேம்படுத்துவதற்குமான புதிய திட்டங்கள் ஏதும் இல்லை.

தமிழக மீனவர்களின் மீன்பிடித் தொழில் பல ஆண்டுகாலமாக இலங்கை கடற்படையால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு நிரந்தர தீர்வு காண்பதற்கான எந்த ஒரு உறுதியான முடிவும் எடுக்கப்பட்டதற்கான அறிவிப்பும் இல்லை.

மேலும் தமிழக டெல்டா விவசாயிகளின் நீண்டகால எதிர்பார்ப்பான காவிரி மேலாண்மை வாரியம், நதிநீர் பங்கீட்டு குழு அமைப்பது குறித்தும் உரையில் அறிவிக்கப்படவில்லை.

ஏழை, எளிய, நடுத்தர மக்களின் வளர்ச்சி, தலித் மற்றும் சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு ஆகியவைப் பற்றி மத்திய அரசின் புதிய அணுகுமுறை குறித்தும் அறிவிப்பில் இல்லாதது பொது மக்களின் எண்ணங்களை முழுமையாகப் பிரதிபலிப்பதாக அமையவில்லை.

இவ்வாறு ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *