சென்னை,
த.மா.கா.வில் வேட்பாளர் நேர்காணல் நேற்றுடன் நிறைவு பெற்றது. 4 நாட்களில் 4 ஆயிரத்து 887 பேர் பங்கேற்றனர்.
நேர்காணல்
தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிட த.மா.கா. சார்பில் விருப்ப மனு அளித்தவர்களிடம் கடந்த 20–ந்தேதி முதல் நேற்று வரை சென்னை தியாகராய நகரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நேர்காணல் நடத்தப்பட்டது.
கட்சியின் மாநில தலைவர் ஜி.கே.வாசன், மூத்த துணை தலைவர்கள் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், பி.எஸ்.ஞானதேசிகன், பீட்டர் அல்போன்ஸ் உள்பட நிர்வாகிகள் நேர்காணல் நடத்தினர்.
நிறைவு நாளான நேற்று ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
மார்ச் 2–வது வாரத்தில்…
த.மா.கா. சார்பில் கடந்த 10–ந்தேதி முதல் 12–ந்தேதி வரை 4 ஆயிரத்து 887 பேரிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டது. அவர்களுக்கான நேர்காணல் 20–ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது. கடைசி நாளான இன்று(நேற்று) இதுவரை 3 ஆயிரத்து 260 பேரிடம் நேர்காணல் நடைபெற்றுள்ளது. இரவுக்குள் அனைவரிடமும் நேர்காணல் நடைபெற்றுவிடும்.
நேர்காணலில் கலந்து கொண்டவர்கள் கட்சியின் வெற்றி வாய்ப்பு குறித்தும், கூட்டணி குறித்தும் கருத்து தெரிவித்து உள்ளனர். கட்சி தொண்டர்களின் உணர்வு படியும், மக்களின் விருப்பப்படியும், எனது சுற்றுப்பயணத்தின் இறுதியில் மார்ச் 2–வது வாரத்தில் கூட்டணி குறித்து தெரிவிப்பேன். அதுவரை வருகின்ற செய்திகள் எல்லாம் யூகத்தின் அடிப்படையிலான செய்திகள் தான்.
வெற்றி கூட்டணி
த.மா.கா. கடந்த 14 மாதங்களில் படிப்படியாக வளர்ந்து, இன்று மறுக்க முடியாத கட்சியாக இயங்கி வருகிறது. த.மா.கா.வை பொறுத்தவரை தேர்தல் கூட்டணிக்கு எந்த அவசரமும் தெரியவில்லை. காரணம் நாங்கள் பலமாக இருக்கிறோம். அவசர அவசரமாக கூட்டணிக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. தேர்தலில் எங்கள் கூட்டணி வெற்றிக்கூட்டணியாக அமையும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
