தமிழக மீனவர் விவகாரத்தில் மத்திய அரசு மெத்தனப் போக்கைக் கைவிட வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதைத் தடுக்க வலியுறுத்தி, தமாகா மீனவர் அணி சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் திங்கள்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்து ஜி.கே.வாசன் பேசியது:
இலங்கை அரசின் அச்சுறுத்தலால் தமிழக மீனவர்கள் அச்சத்திலேயே வாழக்கூடிய சூழல் உள்ளது. இலங்கை அமைச்சர் ஒருவர் தமிழக மீனவர்களை விடுவிக்க மாட்டோம் என்று கூறியுள்ளார். இதனை கண்டிக்காமல், மத்திய அரசு மெத்தனப் போக்கைக் கடைப்பிடிப்பது வேதனையளிக்கிறது. மீனவர்களின் படகுகளை மீட்பதற்கு நூறு சதவீதம் மத்திய அரசு முயற்சி செய்ய வேண்டும். கச்சத்தீவு ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
மீனவர்களுக்கு ஜிபிஎஸ் கருவி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் எல்லை தாண்டி மீனவர்கள் மீன் பிடிப்பதைத் தடுக்க முடியும். மீனவர் விவகாரத்துக்காக பிப்ரவரியில் ராமேசுவரத்தில் தமாகா சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வருகிறது. தமாகாவுக்குத் தேர்தல் என்றால் திருவிழா போன்றது. தமாகாவின் கூட்டணி தொடர்பாக விரைவில் முடிவு செய்வோம் என்றார் அவர்.
மூத்த துணைத் தலைவர்கள் பி.எஸ்.ஞானதேசிகன், பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் உள்பட கட்சியின் நிர்வாகிகள் பலர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
