காமராஜர் ஆட்சிக்கு இப்போது வாய்ப்பில்லை!
காங்கிரஸில் இருந்து பிரிந்து தமாகாவைத் தொடங்கி செயல்பட்டு வரும் ஜி.கே.வாசன் தினமணிக்கு அளித்த பேட்டி:
காமராஜர் ஆட்சி வருகிற சட்டப் பேரவைத் தேர்தலில் சாத்தியமா?
வரும் தேர்தலில் சாத்தியமில்லை. கலப்படமில்லாத காங்கிரஸ் ஆட்சிதான் காமராஜர் ஆட்சி. அதற்கு இந்தத் தேர்தலில் வாய்ப்பில்லை.
காமராஜர் ஆட்சி என்பது திராவிட இயக்கங்கள் இல்லாத மாற்று அரசியல் என்பதை ஏற்பீர்களா?
திமுகவும், அதிமுகவும் 50 ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்டு வருகின்றன. தமிழக அரசியலில் பெரிய மாற்றம் வர வேண்டுமென்றால், அந்த இரண்டு கட்சிகள் இல்லாத இன்னொருவர் மக்களின் நம்பிக்கையோடு ஆள வர வேண்டும். இந்தத் தேர்தலில் அதற்கான சாத்தியக்கூறுகள் எந்தத் தனிக் கட்சிக்கும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. திமுக, அதிமுக அல்லாத கட்சிகள் அனைத்தும் சேர்ந்து ஒரு பெரிய மெகா கூட்டணி ஏற்பட்டால்தான் அது சாத்தியம்.
தமிழகத்தில் அப்படி ஒரு மெகா கூட்டணி அமைவதற்கான சூழல் தற்போது நிலவுகிறதா?
தேர்தல் கூட்டணி, வியூகங்கள் எல்லாம் அனைத்துக் கட்சிகளும் தனித் தனியாக வகுப்பதாகும். பல்வேறு விதங்களில் எல்லாக் கட்சிகளும் யோசனை செய்யும். இறுதி நிலை என்பது அந்தந்தக் கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும்போதுதான் தெரியும். அதுவரை அரசியல் களத்தில் காத்திருந்து கவனிக்க வேண்டிய நிலைதான் தொடரும்.
ஜி.கே.மூப்பனாரின் தமாகா போல தற்போதைய தமாகா வலுவான இயக்கமாக இல்லையே?
1996-இல் தமாகா ஒரு பெரிய வேள்வியில் தொடங்கப்பட்டது. அன்றைக்கு எதிர்பார்ப்புக்கு மேல் தமாகா பலமாக இருந்தது. ஜி.கே.மூப்பனாரின் தலைமை என்பது என்னால் ஈடுசெய்ய முடியாத தனித் தலைமை. இன்றைக்கு மாறுபட்ட சூழல். பல கட்சிகள் களத்தில் வந்துவிட்டன. பெரிய பிரச்னைக்காக நாங்கள் காங்கிரஸில் இருந்து வெளியே வந்துவிட்டோம் என்று யாரும் நினைக்கவில்லை. பிரச்னைக்கு வலு இல்லை என்றே கருதுகின்றனர். ஆனாலும், பெரும்பாலான தொண்டர்கள் எங்களோடு இருப்பது பெரிய பலம். கட்சி தொடங்கிய ஓராண்டு காலத்தில் மக்கள் விரும்பும் இயக்கமாகச் செயல்பட்டு வருகிறோம்.
மக்கள் நலக் கூட்டணியைத் தவிர வேறு எந்தக் கட்சியும் தமாகாவை கூட்டணிக்கு அழைக்கவில்லையே?
எங்களைக் கூட்டணிக்கு வர வேண்டும் என்று அழைத்தவர்களை நான் எந்தவிதத்திலும் குறை சொல்லவில்லை. வைகோ, ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன், திருமாவளவன் ஆகியோர் நிறைய அனுபவசாலிகள். அவர்கள் ஒரு வியூகத்தை வகுத்துள்ளனர். அந்த வியூகத்தின் அடிப்படையில், தமாகாவை அணுகியது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. பிற கட்சிகள் எங்களை அழைக்காதது பற்றிப் பேச விரும்பவில்லை. தேர்தல் களத்தில் ஒவ்வொரு கட்சியும் மற்ற கட்சியை அழைக்க வேண்டும் என்ற எந்தக் கட்டாயமும் இல்லை. அதை எதிர்பார்க்க வேண்டிய அவசியம் தமாகாவுக்கு இல்லை.
காங்கிரûஸ கூட்டணிக்கு அழைத்துள்ள கருணாநிதி, தமாகாவை கூட்டணிக்கு அழைக்கவில்லையே?
என்னுடைய நிலைப்பாட்டை தெளிவாகக் கூறிவிட்டேன். மக்கள், தொண்டர்களின் உணர்வைப் பிரதிபலிக்கும் தேர்தல் களத்தில் செயல்பட வேண்டும் என்று நினைக்கிறோம். உண்மை நிலையை வெளிப்படுத்த வேண்டிய நேரத்தில் தெரிவிப்போம்.
அதிமுகவின் கூட்டணிக்காக நீங்கள் காத்திருப்பதாகவும், அதற்கான பேச்சுவார்த்தை மறைமுகமாக நடைபெறுகிறது என்பதும் உண்மையா?
இதுபோன்று வதந்திகள் வருவது இயல்பானதுதான். பெரிய கட்சிகளும் ஏதாவது ஒரு கட்சிக்காக காத்திருக்கத்தானே செய்கின்றன. அவர்களுக்கெல்லாம் தேர்தல் வியூகம் இருப்பதுபோல எங்களுக்கும் தேர்தல் வியூகம் உள்ளது.
மீண்டும் இணைவதற்கு காங்கிரஸ் மேலிடம் உங்களிடம் தொடர்பு கொண்டதா?
அதற்கு அவர்களுக்கும் அவசியமில்லை, எங்களுக்கும் அவசியம் இல்லை. அதை எதிர்பார்க்கவும் இல்லை. தமாகாவின் தலைவராக எனது கட்சிக்கு வலு சேர்த்துக் கொண்டிருக்கும் வேளையில், இப்படி ஒரு சிந்தனையே எனக்கு வரக் கூடாது அல்லவா? என்னைப் பொருத்தவரை தமாகா பலமான கட்சி. தனித்துப் போட்டியிடுவதா, கூட்டணி அமைத்துப் போட்டியிடுவதா என்பது தொடர்பாக இப்போது எதுவும் சொல்ல விரும்பவில்லை.
ஜல்லிக்கட்டு நடத்த முடியாததற்கு காங்கிரஸ் ஆட்சிதான் காரணமா?
ஜல்லிக்கட்டு மீதான தடை காங்கிரஸ் ஆட்சியின் போதே ஏற்பட்டதுதான். காங்கிரஸ் ஆட்சியில் அதற்குத் தீர்வு கண்டிருக்க வேண்டும். அன்று நானும் அந்தக் கட்சியின் மத்திய அமைச்சராகத்தான் இருந்தேன். அன்றைய சூழலில் அந்த அரசால் இதனைச் செய்ய முடியவில்லை. பல காரியங்களை மற்ற மாநிலங்களுக்கும், தமிழகத்துக்கும் காங்கிரஸ் ஆட்சியில் செய்திருக்கலாம். அதே நேரத்தில், இது முக்கியமான பிரச்னை. இந்தப் பிரச்னைக்கு முக்கியத்துவம் கொடுத்துத் தீர்வு காணப்படவில்லை.
சட்டப்பேரவைத் தேர்தலில் நீங்கள் (ஜி.கே.வாசன்) போட்டியிடுவீர்களா?
என்னுடைய கட்சியில் நிறைய பேருக்கு போட்டியிட வாய்ப்புக் கொடுக்க நினைத்தால், எனக்கான இடத்தையும் நான் வேறு யாருக்காவது கொடுக்கலாம். அல்லது நான் போட்டியிட வேண்டுமென்றாலும் போட்டியிடலாம். நான் போட்டியிடுவதால் மட்டுமே இந்தத் தேர்தலில் தமாகாவுக்கு ஒரு முகம் கிடைக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. அப்படி நான் போட்டியிடாவிட்டால் தமாகா தோற்றுப் போகும் என்பதிலும் எனக்கு நம்பிக்கையில்லை. முதல்வர் வேட்பாளர் என்று என்னை நான் இதுவரை சொல்லிக் கொண்டதே இல்லை. தடுக்கி விழாதபடி கவனமாக நடக்க வேண்டும் என்று மட்டுமே நினைக்கிறேன்.
– த.அரவிந்தன்
முதல்வர் வேட்பாளர் என்று என்னை நான் இதுவரை சொல்லிக் கொண்டதே இல்லை.
