விவசாயிகள் நலன் காக்க மத்திய, மாநில அரசுகள் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார்.
தமிழக விவசாயிகள் பிரச்சினையில் மத்தியில் மற்றும் தமிழகத்தில் ஆளும் கட்சிகளைத் தவிர தமிழக அனைத்து அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு ஒரே நிலையில் விவசாயிகளுக்கு ஆதரவாக இருக்கிறது. எனவே, விவசாயிகள் சார்ந்த போராட்டம், ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் என்று எல்லா கட்சிகளும் தொடர்ந்து மேற்கொண்டு மத்திய, மாநில அரசுகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியது.
டெல்லியில் போராடும் விவசாயிகளை பெரும்பாலான கட்சிகளின் பிரதிநிதிகள் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துக்கொண்டிருக்கிறார்கள். இருப்பினும் இறுதியாக தமிழக விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றக்கூடிய அதிகாரம் ஆட்சிப் பீடத்தில் இருக்கின்ற மத்திய அரசுக்கும் மற்றும் தமிழக அரசுக்கும் மட்டுமே உண்டு.
எனவே, வறட்சியில் இருக்கும் விவசாயிகளைக் காப்பாற்றி, வரும் மாதத்தில் இருந்து அவர்கள் தொடர்ச்சியாக வளத்தையும், வளர்ச்சியையும் பார்க்க கூடிய நிலையை ஏற்படுத்தி, விவசாயிகள் நலன் காக்க மத்திய, மாநில அரசுகள் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று த.மா.கா. சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
