விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஐயா ஜி.கே.வாசன் அவர்கள் வலியுறுத்தினார்.

சேலம் தாதகாபட்டியில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு தலைவர் அவர்கள் பேசியது:

தமிழகத்தில் இதுவரை 65 சட்டப்பேரவைத் தொகுதிகளில் சுற்றுப் பயணம்செய்து, அனைத்துத் தரப்பு மக்களையும் சந்தித்து வருகிறேன்.

அவர்களின் குறைகளைக் கேட்டு தீர்வு காண மக்கள் பணியாற்றி வருகிறோம்.

2011 தேர்தலைப் பொருத்த வரையில், த.மா.கா. கூட்டணியோடு வாக்கு சேகரிக்கும் கட்சியே வெற்றி பெறும்.

தமிழகத்தில் மது பழக்கத்தைக் கொண்டு வந்தது திராவிடக் கட்சிகள்தான்.

மது பழக்கத்தால் குடும்பம் சீரழிகிறது. பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, மக்களும் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று விரும்புகின்றனர்.

அதன்பேரில், மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் மதுக்கடைகளை அரசு மூட வேண்டும்.

அடுத்த இரண்டாவது கட்ட சுற்றுப் பயணத்தை டிசம்பர் இரண்டாவது வாரத்தில் தொடங்க உள்ளேன். பிப்ரவரி இறுதி வரை சுற்றுப்பயணம் செய்து தமிழகத்தில் உள்ள இதர சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள மக்களின் பிரச்னைகளைக் கேட்டறிவேன்.

மேலும், தேர்தல் கூட்டணி குறித்தும் பிப்ரவரி இறுதியில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம். அதுவரை மக்கள் பணி செய்வோம் என்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தீபாவளி பண்டிகை காலம் நெருங்கும் வேளையில் அதிகரித்துள்ள அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இந் நிகழ்ச்சியில்,
ஐயா சுரேஷ் மூப்பனார், மாநில இளைஞரணித் தலைவர் யுவராஜா, மகளிர் அணித் தலைவர் மகேஸ்வரி மற்றும் சேலம் மத்திய மாவட்டத் தலைவர் தேவதாஸ், மேற்கு மாவட்டத் தலைவர் சுசீந்திரகுமார், கிழக்கு மாவட்டத் தலைவர் காளிமுத்து, முன்னாள் எம்.பி. எம்.என்.கந்தசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.