வங்கி ஊழியர்களின் கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும்: ஐயா ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

இது தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஐயா ஜி.கே.வாசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

வங்கிகள் தனியார் மயமாகிவிடாமல் தடுத்து நிறுத்தப்பட  வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்காக செப்டம்பர் 2ம் நாடு முழுவதும் 6 லட்சம் வங்கி ஊழியர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தப்  போராட்டத்தில் பங்கேற்கிறார்கள்.

இவர்கள் அறிவித்தபடி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் இந்தியாவில் வங்கியில் கணக்கு வைத்திருப்போர் முதல்  ஓய்வூதியம் பெறும் முதியவர்கள் வரை வங்கியின் வாடிக்கையாளர்கள் அனைவரும் பாதிக்கப்படுவார்கள்.

பொதுத்துறை வங்கியில் தனியார் வங்கிகளின்  அதிகாரிகளை நியமனம் செய்வதற்கு மத்திய அரசு முடிவு செய்தது. மேலும் ‘பேமெண்ட்’ வங்கிகள் தொடங்க புதிய உரிமங்களை வழங்கவும் ரிசர்வ் வங்கி  அனுமதி அளித்திருக்கிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொள்வதாக பொதுத்துறை வங்கி  ஊழியர்கள் சங்கங்கள் முடிவு செய்துள்ளன.

பொதுத்துறை வங்கிகளின் நோக்கத்தை நீர்த்துப் போகச் செய்யும் வகையில் தனியார் மயமாக்கி, முதலாளிகளுக்கு  ஆதரவாக ஒரு போதும் மத்திய அரசு செயல்படக் கூடாது.

இந்த பிரச்னையில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வங்கி ஊழியர்களின் கோரிக்கையை  நிறைவேற்றிட வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது