மீனவர்கள் பிரச்சினையில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்

நாகை தெற்கு மாவட்ட த.மா.கா. சார்பில் வேதாரண்யம் ராஜாஜி பூங்காவில் த.மா.கா. பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு நாகை தெற்கு மாவட்ட தலைவர் பி.வி.கே.பிரபு தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் த.மா.கா. தலைவர் ஐயா ஜி.கே. வாசன் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது தலைவர் அவர்கள் கூறியதாவது:–

காமராஜர் ஆட்சி காலத்தில் தமிழகம் மின் மிகை மாநிலமாக இருந்தது. தற்போது மின் பற்றாக்குறை மாநிலமாக மாறி விட்டது.

டாஸ்மாக் கடையால் ஏராளமான உயிரிழப்பு ஏற்படுகிறது. எனவே கடை திறக்கும் நேரத்தை பாதியாக குறைக்க வேண்டும். இதனை கவுரவ பிரச்சினையாக பார்க்க கூடாது. சமூக பிரச்சினையாக பார்க்க வேண்டும்.

கர்நாடகாவில் இருந்து காவிரி நீரை பெற தமிழக அரசு அனைத்து கட்சியினரை டெல்லிக்கு அழைத்து சென்று பிரதமரை சந்திக்க வேண்டும்.

இப்பிரச்சினையில் மத்திய அரசு கர்நாடகாவிடம் பேச்சு வார்த்தை நடத்தாமல் தண்ணீர் திறந்து விட உத்தரவிட வேண்டும்.

உப்பு உற்பத்தியில் தமிழகத்தில் வேதாரண்யம் 2–வது இடத்தில் உள்ளது. ஆனால் இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்புக்கு நல்ல விலை கிடைக்கவில்லை. இதனால் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

எனவே தமிழக அரசே உப்பை கொள்முதல் செய்ய வேண்டும். மீனவர்கள் பிரச்சினையில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இரு நாட்டு மீனவர்களின் 3–வது கட்ட பேச்சுவார்த்தை வெற்றி பெறும் வகையில் நடத்த வேண்டும். கோவில் நிலத்தில் குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும்.

சட்டசபை தேர்தல் கூட்டணி குறித்து 2–ம் கட்ட சுற்றுப்பயணம் முடிந்து மார்ச் மாதம் அறிவிக்கப்படும். இந்த கூட்டணி வெற்றி கூட்டணியாக இருக்கும்.

திருத்துறைப்பூண்டி–அகஸ்தியன் பள்ளி அகல ரெயில் பாதை திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும். தஞ்சை-வேதாரண்யம் சாலையை 4 வழி சாலையாக மாற்ற வேண்டும்.

நாகூர், வேளாங்கண்ணிக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் வந்து செல்கிறார்கள். எனவே இங்கு ரெயில் மற்றும் பஸ் வசதியை மேம்படுத்த வேண்டும். சுகாதார வசதியும் செய்து கொடுக்க வேண்டும்.

கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் ஐயா ஜி.ஆர். மூப்பனார், ஐயா சுரேஷ் மூப்பனார், பட்டுக்கோட்டை ரெங்கராஜன் எம்.எல்.ஏ.
மாவட்ட தலைவர்கள் குடவாசல் எஸ். தினகரன், ராம்குமார், சங்கர் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் நாகை தெற்கு மாவட்ட செயலாளர் ஏ. ஜின்னா அலி நன்றி கூறினார்.12144921_905587782849495_6648847899944305443_n