மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் சகோதரர் முகமது முத்துமீரான் லெப்பை மரைக்காயரின் 100-வது பிறந்த நாள் ராமேசுவரத்தில் இன்று கொண்டாடப்பட்டது.
இதில் பங்கேற்பதற்காக த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் ராமேசுவரம் வந்தார். அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நேர்மை, எளிமை, தூய்மை என இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டாக செயல்பட்டவர் அப்துல்கலாம். அவர் தனது சகோதரரின் 100-வது பிறந்த நாளில் பங்கேற்க வேண்டுமென ஆசைப்பட்டார். அவரது கனவை நனவாக்கும் வகையில் இன்று நடைபெற்ற பிறந்த நாள் விழாவில் நான் பங்கேற்றேன்.
ராமேசுவரம்-தனுஷ் கோடி சாலை முழுமையாக நிறைவடைந்த பின்னரும், மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படாமல் உள்ளது. இதனை உடனே திறந்து அரிச்சல்முனை வரை மக்கள் செல்ல வழிவகுக்க வேண்டும். அந்த பகுதியில் பாரம்பரிய மீனவர்கள் வசித்து வரும் குடிசைகளை அகற்றக்கூடாது.
இந்திய-இலங்கை மீனவர்கள் எந்தவித பிரச்சினையும் இன்றி மீன்பிடிப்பதற்காக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் இன்று பேச்சுவார்த்தை நடை பெற்று வருகிறது. இது சுமூகமாக முடிய வேண்டும்.
இலங்கை பிடித்து வைத்துள்ள 115 படகுகளையும் உடனடியாக விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் முழுவதும் சேதமடைந்த 18 படகுகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
தேர்தலின்போது பாரதீய ஜனதா மீனவர்களுக்கு தனி அமைச்சகம் அமைக்கப்படும் என்ற உறுதிமொழியை கொடுத்தது. ஆனால் மத்திய அரசு இதனை செயல்படுத்தாமல் உள்ளது. இதனை செயல்படுத்தி தனி அமைச்சகம் அமைக்க வேண்டும்.
அப்துல்கலாமின் கோரிக்கைபடி ராமேசுவரம்-சென்னை இடையே பாம்பன் எக்ஸ்பிரஸ் என்ற புதிய ரெயிலை இயக்க வேண்டும். அதில் மீன்களை கொண்டு செல்ல குளிர் சாதன பெட்டியும் இணைக்க வேண்டும். மேலும் காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும்.
தமிழகத்தில் கொலை, கொள்ளை தலைவிரித்தாடுகிறது. வீடுகளில் தனியாக வசிக்கும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. இதனை கட்டுப்படுத்த காவல் துறையினர் இரும்பு கரம் கொண்டு குற்றவாளிகளை அடக்க வேண்டும்.
இடைத்தேர்தல் ஜன நாயகப்படி நடக்காது. எனவே தான் நாங்கள் இந்த தேர்தலில் நிற்கவில்லை. உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டி என்ற முடிவில் மாற்றம் இல்லை.
வருகிற 10 மற்றும் 17-ந் தேதிகளில் மாற்றுக்கட்சிகளை சேர்ந்த பலர் த.மா.கா.வில் இணைய உள்ளனர். 26-ந்தேதி தெருமுனை பிரசாரமும், 29-ந்தேதி மாவட்ட தலைவர்கள் கூட்டமும் நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது மாவட்ட தலைவர்கள் ரவிச்சந்திர ராமவன்னி, ரங்கநாதன், பொருளாளர் நாகராஜ், முன்னாள் எம்.எல்.ஏ.ராம்பிரபு ஆகியோர் உடன் இருந்தனர்.
