மாணவ, மாணவிகளுக்கு தரமான கல்வியும், உரிய பாதுகாப்பு வசதிகளையும் ஏற்படுத்தி தர வேண்டியது அரசின் கடமை
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்த 3 மாணவிகள் தற்கொலை செய்து கொண்ட துயர சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. வருத்தத்திற்குரியது.
பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தரமான கல்வி, கல்விக் கட்டணத்தில் ஓர் நிலைத்த தன்மை, போதிய உட்கட்டமைப்பு வசதிகள், போதிய ஆசிரியர்கள் ஆகியவற்றை ஏற்படுத்தி தர வேண்டியது அரசின் கடமை. மேலும் தனியார் கல்லூரி நிறுவனங்கள் மாணவ, மாணவிகள் தரமான கல்வி கற்பதற்கும், அவர்களுக்கு உரிய பாதுகாப்பும் கொடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.
கல்வித்துறை கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் செயல்பட்டு கல்வி நிலையங்களை தங்களின் தொடர் கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும். தற்போது விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்த சென்னை, காஞ்சிபுரம், திருவாரூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 3 மாணவிகள் தங்களை மாய்த்துக் கொண்ட சம்பவத்திற்கு உரிய காரணத்தை அரசு உயர்மட்ட விசாரணை மேற்கொண்டு உண்மை நிலையை கண்டறிய வேண்டும். இது போன்ற சம்பவங்கள் இனிமேலும் நடைபெறாமல் இருப்பதற்கு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து மாணவ, மாணவிகளுக்கு தரமான கல்வி, உரிய பாதுகாப்பு அளித்திட வேண்டும்.
தற்போது தற்கொலை செய்துகொண்ட மாணவிகளின் மரணத்திற்கு காரணமாக இருந்தவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் மீது சட்டத்தின் அடிப்படையில் தண்டனைப் பெற்றுத்தர வேண்டியது அரசின் கடமையாகும்.
தற்கொலை செய்து கொண்ட மாணவிகளின் குடும்பத்திற்கு அரசு தலா 10 இலட்சம் வழங்க வேண்டும். உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
G.K. வாசன்
தலைவர்
தமிழ் மாநில காங்கிரஸ்
