சென்னை : தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் இன்று வெளியிட்ட அறிக்கை: இந்தியாவில் மாநில பாடத்திட்டம், சி.பி.எஸ்.இ., மெட்ரிகுலேசன் என பல்வேறு பாடத்திட்ட முறைகள் நடைமுறையில் இருக்கின்றன. இவ்வாறு பல்வேறு பாடத்திட்ட முறைகளில் படிக்கின்ற மாணவர்கள் மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கு தேசிய நுழைவுத் தேர்வு முறையை கடைப்பிடித்தால் மாணவர்களால் சமச்சீரான முறையில் மதிப்பெண்கள் பெறுவது மிகவும் கடினமானது.
இந்த தேர்வு முறையினால் கிராமப்புற மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்பதால் தமிழகம் உட்பட 15 மாநிலங்கள் இந்த தேர்வு முறைக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். ஆனால் மருத்துவ படிப்புக்கு தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு நடத்தி மாணவர்களை சேர்க்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில் மருத்துவ படிப்புகளுக்கு தேசிய நுழைவுத் தேர்விலிருந்து இந்த ஒரு வருடத்திற்கு விலக்கு அளிப்பதற்காக மத்திய அரசு அவசர சட்டத்தை இயற்றி, அதற்கு இந்திய ஜனாதிபதியின் ஒப்புதலைப் பெற்றுள்ளது. இது வரவேற்கத்தக்கது. மேலும் இந்த ஆண்டிற்கு மட்டுமல்லாமல் இனி வரும் கல்வி ஆண்டுகளிலும் மருத்துவ படிப்புகளுக்கு தேசிய நுழைவுத் தேர்வு கூடாது என்பதை மத்திய அரசு உறுதி செய்துகொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். – See more at: http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=93193#sthash.DRLGve0G.dpuf
