பெண் என்ஜினீயர் சுவாதி கொலை: குற்றவாளியை கைது செய்து தண்டனை பெற்று தரவேண்டும் – ஜி.கே.வாசன்

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

சென்னையைச் சேர்ந்த பெண் பொறியாளர் சுவாதி அவர்கள் ஒரு தனியார் ஐ.டி. கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அவர் சென்னை, நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்டு 6 நாட்கள் ஆகியும் இன்னும் அவரை கொலை செய்த குற்றவாளியை காவல் துறையினர் கண்டு பிடிக்காமல் இருப்பது சென்னையில் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் உள்ள பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்தக் கொலையில் மர்மம் நீடிக்கிறது. காவல் துறையினர் தங்களுடைய முழுத் திறமையையும் பயன்படுத்தி குறுகிய காலக் கெடுவிற்குள் இந்தக் கொடூரமான கொலையை செய்த நபரை கைது செய்து, சட்டத்தின் முன் நிறுத்தி கொலையாளிக்கு உச்சக்கட்ட தண்டனையைப் பெற்றுத்தர வேண்டும்.

மேலும் சுவாதியின் கொலை சம்பந்தமாக தவறான தகவல்களைப் பரப்பும் நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு காவல் துறையினர் உரிய தண்டனையைப் பெற்றுத் தரவேண்டும். அப்பொழுது தான் இது போன்ற தவறான செய்திகள் இனி வரும் காலங்களில் வெளிவராமல் தடுக்க முடியும்.

எனவே ரெயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் பொது மக்கள் அதிகமாக கூடும் இடங்களில், அவர்கள் அதிகமாக நடமாடும் நேரங்களிலே காவல் துறையினர் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும். காவல் துறையினர் சிறப்பு அதிகாரிகள் கொண்ட குழுவை அமைத்து, தமிழகம் முழுவதும் உள்ள சமூக விரோதிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்.

மத்திய அரசு நம் நாட்டில் உள்ள எல்லா ரெயில் நிலையங்களிலும், மாநில அரசு தமிழகத்தில் பொதுமக்கள் அதிகமாக நடமாடும் இடங்களிலும் சி.சி.டி.வி கேமராவைப் பொறுத்த கூடிய நிலையை போர்க்கால அடிப்படையில் எடுக்க வேண்டும். இது போன்ற சம்பவங்கள் இனி ஒருபோதும் நம் நாட்டில் எங்கும் நடைபெறாமல் இருப்பதற்கு உண்டான நடவடிக்கையை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *