நெல், காய்கறி விதைகளை வெளிநாட்டு நிறுவனங்கள் விற்பனை செய்யக்கூடாது:- ஜி.கே.வாசன்

விதை நெல் மற்றும் காய்கறி விதைகள் நம் நாட்டு விவசாயிகளே உற்பத்தி செய்கிறார்கள். ஆனால் மத்திய அரசு பன்னாட்டு நிறுவனங்களுக்கு விதை உற்பத்திக்கு முன்னுரிமை கொடுத்து, அவர்கள் தயாரிக்கும் ஹைப்பிரிட் விதையை இங்கு விற்கிறது. இது விவசாயிகளுக்கு எதிரானது.

இதனால் இந்திய விவசாயிகளின் தொழில், விதை உற்பத்தி திறன் பாதிக்கப்படுகிறது.நம் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் விதைகளின் விலையை விட பன்னாட்டு நிறுவனம் விற்கும் ஹைப் பிரிட் விதைகளின் விலை 10 முதல் 20 மடங்கு வரை அதிகம். குறிப்பாக வெண்டைக்காய், கத்தரிக்காய், தக்காளி போன்றவற்றின் ஒரு கிலோ ஹைப்பிரிட் விதை குறைந்தது 3,000 ரூபாய்க்கும், மிளகாய்க்கான ஹைப்பிரிட் விதை ஒரு கிலோ சுமார் 45,000 ருபாய்க்கும் பன்னாட்டு நிறுவனம் விற்கிறது.இது விவசாயிகளுக்கு அதிக செலவீனத்தை கொடுக்கக்கூடியது.

இந்தியாவில் இருக்கின்ற விவசாயிகள் பயன்படுத்தும் வகையில் விதை நெல், காய்கறி விதைகளை நம் நாட்டில் இருக்கின்ற வேளாண் ஆராய்ச்சி மையங்களின் மூலம் தரம் வாய்ந்த ஹைப்பிரிட் விதைகளை நம்மால் குறைந்த விலையில் தாயாரிக்க முடியும்.விவசாயிகளின் ஆலோசனைகளை கேட்டறிந்து விதைகள் உயர்ந்த தரத்தில் நம் நாட்டிலேயே அரசு தயாரிப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள விதைச்சட்டத்தில் உள்ள குளறுபடிகளை நீக்கி இந்தியாவில் விவசாயம் தழைக்க, விவசாயிகளுக்கு உரிய பாதுகாப்பு அளித்திட செயல்திட்டங்களை வகுக்க வேண்டும்.

மேட்டூர், கல்லணை, வீராணம் வரை உள்ள 15 மாவட்டங்களுக்கு உட்பட்ட 60 பகுதிகளில் கூட்டு குடிநீர் திட்டம் செயல்பட்டு வருகிறது. இத்திட்டம் பயனுள்ளதாக இருக்கிறது.

கடந்த பிப்ரவரி மாதம் மேட்டூர் அணை மூடப்பட்டது. இதனால் கூட்டு குடிநீர் பகுதியின் விவசாயமும், குடிநீர் தேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.

தற்சமயம் மேட்டூர் அணையிலிருந்து 2000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது போதுமானதல்ல. மேலும் குறைந்தது 3000 கன அடி தண்ணீர் தேவைப்படுகிறது.எனவே மேட்டூர் அணையிலிருந்து உடனடியாக தண்ணீர் திறக்கப்பட வேண்டும். இல்லையென்றால் தண்ணீர் உரிய நேரத்தில் கிடைக்காமல் விளைச்சல் பாதிக்கும்; குடிநீர் தட்டுப்பாடும் ஏற்படும்.

மழைக்காலங்களில் உபரி நீர் கடலில் கலக்காமல் விவசாயத்திற்கும், குடிநீருக்கும் பயன்படுத்துவதற்கு திட்டங்கள் கொண்டு வரவேண்டும்.

கூட்டு குடிநீர் திட்டத்தினால் நீர் ஆதாரத்தை சேமிப்பதற்கும் செயல்திட்டங்கள் வகுத்து நிறைவேற்ற வேண்டும்.

ஜி.கே.வாசன்