இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
நியாயவிலை கடைகளில் வழங்கப்படும் உணவுப் பொருட்கள் தரத்துடன் மற்றும் உரிய நேரத்தில் கிடைப்பதற்கு மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நியாயவிலை கடைகளில் பொதுமக்களுக்கு குறிப்பாக ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
அரசு விலையில்லா அரிசியை ஏழை மக்களுக்கு வழங்குகிறது. ஆனால் இவ்வாறு வழங்கப்படும் அரிசியின் தரம் குறைவாக இருப்பதினால் மக்கள் இதனை வாங்குவதற்கு தயங்குகிறார்கள். சில நேரங்களில் வாங்க மறுக்கிறார்கள்.
அத்தியாவசிய பொருட்களின் விலை வெளிச்சந்தையில் அதிகமாக இருப்பதினால் ஏழை மக்கள் சுமையை குறைப்பதற்கு பொது விநியோகத் திட்டத்தின் மூலம் துவரம் பருப்பு கிலோ ரூ.30 க்கும், உளுத்தம் பருப்பு கிலோ ரூ.30 க்கும், பாமாயில் லிட்டர் ரூ.25 க்கும் வழங்கப்படுகிறது.
ஆனால் அனைத்து மக்களின் தேவைக்கேற்ப அவைகள் நியாயவிலை கடைகளில் கிடைப்பதில்லை. காரணம் 50 சதவீதத்திற்கும் குறைவான உணவுப்பொருட்களையே அரசு ஒதுக்கீடு செய்கிறது. எனவே அரசு 100 சதவீதம் ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஒதுக்கீடு செய்யப்படும் உணவுப்பொருட்கள் சரியான எடையுடன் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
தமிழகத்தில் அரிசி, சர்க்கரை, அன்ன யோஜனா போன்ற பல்வேறு பிரிவுகளில் சுமார் ஒரு கோடியே 98 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு சுமார் 34 ஆயிரம் நியாயவிலை கடைகள் மூலம் உணவுப்பொருட்கள் வழங்கப்படுகிறது.
இதில் 75 சதவீதம் நியாயவிலை கடைகள் பெரும்பாலும் கிராமப்புறங்களில் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கம், கூட்டுறவு பண்டகச்சாலை இவற்றின் நிர்வாகத்தின் கீழ் இயங்குகிறது.இவைகள் பகுதி நேர கடைகளாக செயல்படுவதினால் பொதுமக்கள் உரிய நேரத்தில் அனைத்து பொருட்களையும் வாங்குவதில் தாமதம் ஏற்படுகிறது.
நியாயவிலை கடைகள் திறந்திருக்கும் நாட்களில் அரசு ஒதுக்கீடு செய்திருக்கும் உணவுப்பொருட்கள் எல்லாம் ஒரே நேரத்தில் கிடைப்பதற்கும் அல்லது ஒரு குறிப்பிட்ட நாளில் அனைத்துப்பொருட்களும் கிடைப்பதற்கு அரசு வழி வகை செய்ய வேண்டும். அப்பொழுது தான் பொதுமக்கள் நேரம் வீணாகாமல், அலைச்சல் இன்றி, உரிய நேரத்தில் அனைத்து உணவுப்பொருட்களையும் வாங்கி பயனடைவார்கள்.
குடும்ப அட்டைதாரர்கள் அனைவரும் தங்கள் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அரசி, சர்க்கரை உட்பட அனைத்து அத்தியாவசிய பொருட்களை வாங்க நீண்ட வரிசையில் நின்றும் சில பொருட்கள் கிடைக்காமல் போகும் நிலையே உள்ளது. இதனால் அன்றாடம் வேலைக்கு செல்லும் ஏழை தொழிலாளிகளின் நேரமும் வீணாகி, அவர்கள் வேலைக்கு செல்ல முடியாமல், அவர்களது தினசரி வருமானமும் கேள்விக்குறியாக இருக்கின்றது.
எனவே நியாயவிலை கடைகளில் வழங்கப்படும் உணவுப்பொருட்கள் தரத்துடன், எடையின் அளவு குறையாமல், உரிய நேரத்தில் அனைவருக்கும் கிடைப்பதற்கு மாநில அரசு உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டு, அதனை செயல்படுத்த வேண்டும்.
ஜி.கே.வாசன்
தலைவர் ( த.மா.கா )
