மக்களை நோக்கி மக்கள் தளபதி
தேனியில்
தேனி மாவட்டத்தில் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் வாசன் சுற்றுபயணம் செய்தார்.
தேனியில் நேரு சிலைக்கு மாலை அணிவித்த அவர் கூறியதாவது:
முல்லை பெரியாறு அணை பாதுகாப்பில் தீவிரவாதிகள் மிரட்டல் உள்ளது என கூறி அணையை கேரள அரசு தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சிக்கிறது.
இது ஏற்புடையது அல்ல.
பெரியாறு அணை ஆறு மாவட்ட மக்களின் வாழ்வாதரம். எனவே, மத்திய அரசு காலம் தாழ்த்தாமல் பெரியாறு அணை பாதுகாப்பிற்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையை நிறுத்தவேண்டும்.
கேரள அரசு தமிழக காய்கறிகளில் நச்சு தன்மை உள்ளது என தவறான தகவலை கூறி தடை விதித்துள்ளது கண்டனத்திற்கு உரியது.
தமிழக அரசு கேரள அரசுடன் பேசி தடையை நீக்க வேண்டும்.
மதுக்கடைகளை மூட கோரி பல்வேறு இயக்கங்கள் போராடுகின்றன.
த.மா.கா., நாடுதழுவிய போராட்டம் 2 மாதத்திற்கு முன் நடத்தியது.
தமிழக அரசு இந்த பணியை மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் செய்து முடிக்க வேண்டும்.
படிப்படியாக இப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
சசிபெருமாள் மரணத்திற்கு பிறகு அவரது குடும்பத்தார் மதுகடைகளை மூட கோரிக்கை வைத்துள்ளனர்.
அரசு இன்னும் நியாயமான முறையில் செவி சாய்க்கவில்லை என்பது வருத்தத்திற்குரிய செய்தி.
வன்முறையில் யாரும் ஈடுபடக்கூடாது. பொதுமக்களுக்கு இதில் விருப்பம் இல்லை.
தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த கோருகிறோம். அல்லது படிப்படியாக ‘டாஸ்மாக்’ கடை எண்ணிக்கையை குறைக்க வேண்டும்.
அரசு நினைத்தால் 50 சதவீதம் கடைகளை உடனே குறைக்க முடியும்.
நேரத்தை சரிபாதியாக குறைக்க முடியும். பார்களை அரசு மூட வேண்டும்.
குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்களின் உரிமத்தை உடனே ரத்து செய்யலாம்.
இதுபோன்ற கடும் நடவடிக்கை எடுக்கலாம். மக்கள் விருப்பத்திற்கு ஏற்ப பிரச்னைகளை உணர்ந்து செயல்படவேண்டும், என்றார்.
