தாம்பரம் – திருநெல்வேலி இடையே அறிவிக்கப்பட்ட அந்த்யோதயா எக்ஸ்பிரஸ் ரயிலை உடனடியாக இயக்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் தாம்பரம் முதல் திருநெல்வேலி வரை இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட “அந்த்யோதயா” எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்க ரயில்வே துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடந்த ஏப்ரல் 27-ம் தேதியே இயக்குவதாக அறிவித்துவிட்டு இன்னமும் இந்த ரயிலை இயக்காமல் இருப்பது நியாயமில்லை. அதுவும் இப்போது கோடை விடுமுறை காலத்தில், ரயிலில் வெளியூர் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் வேளையில், அந்யோதயா ரயிலை இயக்காமல் இருப்பது ஏற்புடையதல்ல. மேலும் இந்த ரயில் சிதம்பரம், கும்பகோணம், கொடைக்கானல் சாலை, கோவில்பட்டி ரயில் நிலையங்களில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
